பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவுக்கு கடவுள் கொடுத்த வரம். அவரது தலைமையில் நாடு அடைந்துள்ள முன்னேற்றம் கற்பனை செய்ய முடியாதது என்று மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சௌஹான் கூறியிருக்கிறார்.
மத்தியப் பிரதேச மாநிலத்தில் கடந்த 17-ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடந்து முடிந்திருக்கிறது. வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 3-ம் தேதி நடைபெற்று, தேர்தல் முடிவுகள் வெளியிடப்படவிருக்கிறது. இந்த சூழலில், மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சௌஹான் தனது மனைவியுடன் உஜ்ஜைனியிலுள்ள புகழ்பெற்ற மகாகாலேஷ்வர் கோவிலில் பிரார்த்தனை செய்தார்.
பழமையான சக்தி பீட மாதா ஹர்சித்தி கோவில் மற்றும் மங்கல்நாத் கோவிலிலும் முதல்வர் சௌஹான் வழிபாடு செய்தார். மகாகாள் கோவிலின் கருவறைக்குள் சென்ற முதல்வர், சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்தார். பின்னர், கோவிலில் உள்ள நந்தி மண்டபத்தில் அமர்ந்து, கோவில் பூசாரி மந்திரங்களை ஓத, முதல்வர் சௌஹான் பாபா மகாகாளை வணங்கினார்.
தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய சௌஹான், பாபா மகாகாள் கோவிலுக்குச் சென்றது எனது அதிர்ஷ்டம். மாநில மற்றும் நாட்டு மக்களின் மகிழ்ச்சிக்காகவும், நலனுக்காகவும் பிரார்த்தனை செய்தேன். பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவுக்கு கடவுள் கொடுத்த வரம். அவரது தலைமையில் நாடு அடைந்துள்ள முன்னேற்றம் கற்பனை செய்ய முடியாதது மற்றும் ஆச்சரியமானது.
அனைத்து மாநிலங்களிலும் வெற்றி பெற்று, பா.ஜ.க. சாதிக்கும் என்று எனக்கு முழு நம்பிக்கை இருக்கிறது. மேலும், 2024-ல் மத்தியில் மீண்டும் பிரதமர் மோடி தலைமையில் பா.ஜ.க. ஆட்சி அமைக்கப்படும். ராகுல் காந்தி தேசிய அவமானமாகி விட்டார். காங்கிரஸ் தனது அறிவை இழந்துவிட்டது.
உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில் இந்தியா தோல்வியடைந்ததால் நாடு முழுவதும் சோகத்தில் இருக்க, காங்கிரஸ்காரர்கள் மகிழ்ச்சியில் கிண்டல் செய்தனர். இந்த வெளிப்பாடு தேசத் துரோகத்தின் உச்சம். காங்கிரஸ் குருடாகி, ராகுல் காந்தி தேசிய அவமானமாகி விட்டார்” என்றார்.