பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் இமாத் வாசிம் 34 வயதில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்து இருக்கிறார்.
இவரை அடுத்த பாகிஸ்தான் அணியின் டி20 கேப்டனாக நியமிக்க வேண்டும் என முன்னாள் வீரர்கள் பலர் கூறிய நிலையில் அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார்.
பாகிஸ்தான் கிரிக்கெட்டில் வீரர்கள் தேர்வில் நிறைய அரசியல் இருக்கிறது. நல்ல டி20 வீரராக அறியப்பட்ட இமாத் வாசிம், அந்த அரசியலில் சிக்கி கடந்த சில மாதங்களாக அணியில் இடமின்றி தவித்து வந்தார்.
அணியில் தேர்வு செய்யப்படாமல் தொடர்ந்து முதுகில் குத்தப்பட்ட நிலையில் 34 வயதில் ஓய்வை அறிவித்து இருக்கிறார் இமாத் வாசிம்.
இனி சர்வதேச போட்டிகள் அல்லாத பல நாடுகளில் நடைபெறும் உள்ளூர் டி20 தொடர்களில் பங்கேற்க உள்ளதாகவும் அவர் அறிவித்துள்ளார்.
பாகிஸ்தான் டி20 அணியின் சிறந்த சுழற் பந்துவீச்சு ஆல் – ரவுண்டராக அறியப்பட்ட இமாத் வாசிம் 2015 ஜூலை மாதம் சர்வதேச கிரிக்கெட்டில் இலங்கை அணிக்கு எதிராக அறிமுகம் ஆனார்.
கடைசியாக 2020 யில் ஒருநாள் போட்டியில் விளையாடினார். அதன் பின் அவருக்கு ஒருநாள் அணியில் காரணமே இல்லாமல் இடம் மறுக்கப்பட்டது ஆனாலும், டி20 அணியில் அவ்வப்போது இடம் பெற்று வந்தார்.
கடைசியாக 2023 ஏப்ரல் மாதம் பாகிஸ்தான் அணிக்காக விளையாடினார். பாகிஸ்தான் அணிக்கு எதிரான அந்தப் போட்டியில் பேட்டிங்கில் 31 ரன்கள் குவித்த இமாத் வாசிம், 2 விக்கெட்களையும் வீழ்த்தினார்.
ஆனால், அதன் பின் அவருக்கு டி20 அணியில் இடம் கிடைக்கவில்லை. அதனால் மனம் நொந்தப் போன அவர் ஒருநாள் போட்டி உலகக்கோப்பை அணியில் இடம் கிடைக்கும் என எதிர்பார்த்தார். அதுவும் கிடைக்கவில்லை.
அதை அடுத்து அவர் உலகக்கோப்பைத் தொடரின் போது வர்ணனையாளர் பணியை செய்தார். அப்போது வாசிம் அக்ரம், உள்ளூர் போட்டிகளில் ஆடாமல் இவருக்கு தொலைக்காட்சியில் என்ன வேலை? என கேள்விகள் எழும்பியது.
இந்நிலையில் உலகக்கோப்பை தொடருக்கு பின் பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளர் குழு மாறி விட்டது. தேர்வுக் குழு தலைவர் மாறி விட்டார்.
ஆனாலும், இமாத் வாசிம் புறக்கணிக்கப்படுவதாக எண்ணிய நிலையில் தற்போது இனியும் காலம் தாழ்த்தக் கூடாது என அவர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்து இருக்கிறார்.
இவர் அடுத்த கேப்டன் ஆவார் என முன்னாள் வீரர்கள் மட்டுமே கூறி வந்தனர். பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பு இவரை கண்டு கொள்ளக் கூட இல்லை என்பது தற்போது தெரிய வந்துள்ளது.