மணல் கடத்தல் தொடர்பான விசாரணைக்கு அரசு அலுவலர்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் அழைத்தால், திமுக அரசு பதறுவது ஏன் என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணமாலை தெரிவித்துள்ளார்.
என் மண் என் மக்கள் என்ற தலைப்பில் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பாதயாத்திரை நடத்தி மக்களை சந்தித்து வருகிறார். 61-வது நாளான நேற்று துறையூர் தொகுதியில் நடைபயணம் நடைபெற்றது.
அங்கு மக்களிடையே பேசிய அண்ணாமலை,
இன்றைய என் மண் என் மக்கள் பயணம், தென் திருப்பதி என்றழைக்கப்படும், திருப்பதிக்கு இணையான பெருமை உடைய பிரசன்ன வெங்கடேச பெருமாள் ஆலயம் அமைந்திருக்கும் திருச்சி மாவட்டம் பிரதமர் மோடி மீது பேரன்பு கொண்ட மக்களின் பெரும் ஆரவாரத்துடன் சிறப்பாக நடைபெற்று வருகிறது என அவர் தெரிவித்தார்.
தமிழகத்தில் 6 முறை ஆட்சி செய்தும் துறையூர் தொகுதியில், ரயில் வசதி இல்லை, அரசுக் கல்லூரிகள் இல்லை. அடிப்படை வசதிகளை கூட நிறைவேற்றப்படவில்லை. . கல்விக்கேற்ற வேலைவாய்ப்பை உருவாக்காமல் இளைஞர்கள் வேலைக்காக வெளியூர், வெளி மாநிலங்களுக்குச் செல்லும் நிலையில்தான் 60 ஆண்டு கால ஆட்சி உள்ளது என அவர் கூறினார்.
வறுமையை ஒழித்து, ஏழை மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த வேண்டிய திமுக அரசு, சாதாரண ஏழை எளிய குழந்தைகளுக்கும் மருத்துவக் கல்விக்கான வாய்ப்புகளை வழங்கும் நீட் தேர்வை ஒழிப்போம் என்றும், சனாதன தர்மத்தை ஒழிப்போம் என்றும் மடைமாற்றும் செயல்களில் ஈடுபட்டு வருகிறது. விலைவாசி உயர்வு, மின் கட்டண உயர்வு உள்ளிட்ட மக்கள் பிரச்சினைகள் எதுவும் தெரியாமல், பொம்மை முதலமைச்சராக இருக்கிறார் ஸ்டாலின் என அவர் தெரிவித்தார்.
திமுகவினரின் மணல் கடத்தலை தடுக்க வந்த துறையூர் வருவாய் ஆய்வாளரை, திமுக ஊராட்சித் தலைவரே ஆயுதங்களால் கடுமையாகத் தாக்கியது, தூத்துக்குடி கிராம நிர்வாக அலுவலர் அவரது அலுவலகத்திலேயே கொலை செய்யப்பட்டது என, தமிழகம் முழுவதும், மணல் கொள்ளை தொடர்கிறது. ஆனால் மணல் கடத்தல் தொடர்பான விசாரணைக்கு அரசு அலுவலர்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் அழைத்தால், திமுக அரசு பதறுகிறது எனறும் அவர் கூறினார்.
பிரதமர் மோடி ஆட்சியில், நெல்லுக்கு குறைந்தபட்ச ஆதார விலை கடந்த 9 ஆண்டுகளில் 67 சதவீதம் உயர்ந்துள்ளது. 2013-14 ஆம் ஆண்டு ஒரு குவிண்டாலுக்கு 1310 ரூபாயாக இருந்த கொள்முதல் விலை தற்போது ஒரு குவிண்டாலுக்கு 2183 ரூபாயாக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் 46 லட்ச விவசாயிகளுக்கு வருடம் 6000 ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 4 ஆண்டுகளில் 18.8 லட்சம் விவசாயிகளுக்கு பிரதம மந்திரி கிசான் கடன் அட்டை வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக கடந்த 4 ஆண்டுகளில் தமிழகத்திற்கு வழங்கப்பட்ட கடன் தொகை 48,545 கோடி ரூபாய். 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் தமிழகத்திற்கு வழங்கப்பட்ட நிதி 48,506 கோடி ரூபாய். தமிழகத்தில் பயிர் காப்பீடுக்கு செலவிட்ட நிதி 1231 கோடி ரூபாய். நீர்ப்பாசன மேம்பாட்டிற்கு மத்திய அரசு வழங்கிய நிதி 2961 கோடி ரூபாய். காவிரி நதியின் மேம்பாட்டிற்கு வழங்கிய நிதி 264 கோடி ரூபாய் என அண்ணாமலை கூறினார்.
45 கிலோ மூட்டை யூரியா விவசாயிகளுக்கு 242 ரூபாய்க்கு நமது மத்திய அரசு வழங்குகிறது. இதன் சந்தை விலை ஒரு மூட்டைக்கு 3000 ரூபாய் ஆகும். இந்தியாவில் உள்ள அனைத்து விவசாயிகளும் மானிய விலையில் யூரியா வாங்க மத்திய அரசு கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் செலவிட்ட தொகை 4,24,500 கோடி ரூபாய். தமிழகத்திற்கு மட்டும் செலவிட்ட தொகை சுமார் 16,980 கோடி ரூபாய் ஆகும். தமிழகத்தில் மானிய விலையில் உரம் வாங்கி பயன்பெற்றவர்களின் மொத்த எண்ணிக்கை 27,35,187 பேர். இது பிரதமர் மோடி தமிழக விவசாயிகள் நலன் காக்க செய்தது என அவர் குறிப்பிட்டார்.
ஆனால், திமுக தேர்தல் வாக்குறுதியில் விவசாய உற்பத்தி பாதிக்கப்படும் வகையில், விவசாயிகளின் ஒப்புதல் இல்லாமல், விளைநிலங்களை வேறு பயன்பாட்டிற்கு மாற்றுவதைத் தடுத்திட நடவடிக்கைகள் மேற்கொண்டு, விளைநிலங்களை பாதுகாக்கப்படும்.” என்று கூறியிருந்தனர்.
ஆனால், சமீபத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தில் தங்கள் விவசாய நிலத்தைக் காக்கப் போராடிய விவசாயிகள் மீது குண்டாஸ் வழக்கு பதிவு செய்தது திமுக. பாஜக போராட்டம் அறிவித்த பின்னர் தான், விவசாயிகள் மீது போடப்பட்ட குண்டாஸ் வழக்கை திமுக நிறுத்திவைத்தது. டெல்டாகாரன் என்று சொல்வதற்கு ஸ்டாலினுக்கு எந்த தகுதியும் இல்லை.
துறையூர் தொகுதிக்கு திமுக கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளான, பாதாள சாக்கடைத் திட்டம், புதிய பேருந்து நிலையம், புறவழிச்சாலை, அரசு மருத்துவமனைகள் நவீனப்படுத்தல், சமுதாயக் கூடம், பச்சைமலையில் அதிகமாக விளையும் முந்திரி மகசூலுக்காக முந்திரி பதப்படுத்தும் தொழிற்சாலை என துறையூருக்கு கொடுத்த எந்த வாக்குறுதிகளும் திமுக நிறைவேற்றவில்லை என அண்ணாமலை சாடினார்.
தமிழகத்தில் கடந்த 30 மாதங்களாக நடக்கும் மக்கள் விரோத திமுக ஆட்சி அகற்றப்பட வேண்டிய ஆட்சி. இளைஞர்கள் மேம்பாடு, வேலைவாய்ப்பு, கல்விக்கேற்ற வேலை, வேலைக்கேற்ற ஊதியம் என அனைவருக்குமான, சாமானிய மக்களுக்கான ஆட்சியை பாஜகவால் மட்டும்தான் தர முடியும் என அண்ணாமலை குறிப்பிட்டார்.