கடந்த 15 நாட்களாக 41 தொழிலாளர்கள் சிக்கித் தவிக்கும் சில்க் யாரா சுரங்கப்பாதைக்குள் இடிபாடுகளில் சிக்கிய ஆகர் இயந்திரத்தின் பாகங்களை வெட்டி அகற்றுவதற்காக ஹைதராபாத்தில் இருந்து பிளாஸ்மா கட்டர் வரவழைக்கப்பட்டுள்ளது.
உத்தரகாசி சில்க் யாரா சுரங்கப்பாதையில் சிக்கியுள்ள 41 தொழிலாளர்களை மீட்கும் பணி 14வது நாளை எட்டியுள்ளது. இந்நிலையில், துளையிடும் இயந்திரத்தின் பிளேடுகள் (auger drilling machine) பழுதடைந்ததால் நேற்று மீட்புப் பணி நிறுத்தப்பட்டது.
இந்நிலையில் சுரங்கப்பாதைக்குள் இடிபாடுகளில் சிக்கிய ஆகர் இயந்திரத்தின் பாகங்களை வெட்டி அகற்றுவதற்காக ஹைதராபாத்தில் இருந்து பிளாஸ்மா கட்டர் வரவழைக்கப்பட்டுள்ளது. ஆகர் இயந்திரத்தின் பாகங்களை அகற்றினால் மட்டுமே மீட்புப்பணியை மீண்டும் தொடர் முடியும்.
ஆகர் இயந்திரத்தின் பிளேடுகள் மீட்கும் நடவடிக்கைகளுக்கு உதவுவதற்காக இந்திய ராணுவத்தின் பொறியாளர் குழுவான மெட்ராஸ் சாப்பர்ஸின் ஒரு பிரிவு உத்தரகாசி வந்துள்ளது.
இந்த பிளாஸ்மா இயந்திரம் அதிக வெட்டும் திறனை கொண்டதால் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற உதவும் என அயல்நாட்டு சுரங்கப்பாதை நிபுணர் கிறிஸ் கூப்பர் தெரிவித்துள்ளார்.
மேலும் மாற்று வழிகளையும் மீட்புக்குழுவினர் ஆராய்ந்து வருகின்றனர். செங்குத்து துளையிடல் மற்றும் மனிதர்கள் மூலம் துளையிடும் பணி உள்ளிட்ட திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.