இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் இரண்டாம் ஆட்டம் இன்று திருவனந்தபுரத்தில் நடைபெறவுள்ளது.
முதல் போட்டியில் இந்தியா வெற்றி பெற்று 1-0 என்று முன்னிலை வகிக்கிறது. இந்த போட்டியில் வென்று தொடரில் மேலும் முன்னிலை பெற சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி தீவிரம் காட்டுகிறது.
அதேநேரம், தொடரின் முதல் வெற்றியை பதிவு செய்ய ஆஸ்திரேலியாவும் மல்லுக்கட்டுகிறது. இதனால், இன்றைய போட்டியில் பரபரப்பிற்கு பஞ்சமிருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.
ஐபிஎல் தொடரில் விளையாடிய அனுபவம் வாய்ந்த இளம் வீரர்கள் இந்திய அணியில் இடம்பெற்றுள்ளனர். உள்ளூர் மைதானங்களில் போட்டி நடைபெறுவது அவர்களுக்கு கூடுதல் சாதகமாக உள்ளது.
பேட்டிங்கில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும், இந்திய வீரர்கள் பந்துவீச்சில் ரன்களை வாரி வழங்குவதை கட்டுப்படுத்த வேண்டியுள்ளது. மறுமுனையில், உலகக் கோப்பையில் விளையாடிய அணியை பெரிய மாற்றம் எதுவும் இன்றி ஆஸ்திரேலிய அணி அப்படியே களமிறக்கியுள்ளது.
முதல் போட்டியில் ஓய்வளிக்கப்பட்ட மேக்ஸ்வெல், ஜாம்பா டிராவிஸ் ஹெட் ஆகியோர் இன்றைய போட்டியின் மூலம் மீண்டும் அணிக்கு திரும்புவர் என எதிர்பார்க்கமுடிகிறது.
மேலும் போட்டி நடைபெறும் திருவனந்தபுரம் பகுதியில் இன்று மழைக்கு வாய்ப்புள்ளதாக, வானிலை அறிக்கையில் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதனால், போட்டி மழையால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. இந்த மைதானத்தில் இந்திய அணி இதுவரை 3 டி-20 போட்டிகளில் விளையாடியுள்ளது. அதில் இரண்டில் வெற்றியும், ஒன்றில் தோல்வியும் சந்தித்துள்ளது.