2008-ம் ஆண்டு நடந்த மும்பைத் தீவிரவாதத் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினார்.
கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் மாதம் 26-ம் தேதி, பாகிஸ்தானைச் சேர்ந்த லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் 10 பேர் கடல் வழியாக மகாராஷ்டிர மாநிலம் மும்பைக்குள் நுழைந்தனர்.
சத்ரபதி சிவாஜி மஹராஜ் இரயில் நிலையம், ஓபராய் ஓட்டல், தாஜ் மஹால் ஓட்டல், லியோ கபே, காமா மருத்துவமனை, யூதர்கள் சமுதாய மையம் ஆகிய இடங்களில் புகுந்து சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர்.
இத்தாக்குதலில் பாதுகாப்புப் படை வீரர்கள் 18 பேர், வெளிநாட்டினர் உட்பட 166 பேர் உயிரிழந்தனர். பின்னர், தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே 60 மணி நேர சண்டையில், தீவிரவாத தடுப்புப் பிரிவு தலைவர் ஹேமந்த் கர்கரே, ராணுவ மேஜர் சந்தீப் உன்னிகிருஷ்ணன், மும்பை கூடுதல் கமிஷனர் அசோக் காம்தே, இன்ஸ்பெக்டர் விஜய் சலாஸ்கர், உதவி எஸ்.ஐ., துக்காராம் ஓம்லே உள்ளிட்டோர் வீர மரணம் அடைந்தனர்.
மேலும், தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகளில் 9 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். உயிருடன் பிடிபட்ட தீவிரவாதி அஜ்மல் கசாப் கடந்த 2012-ம் ஆண்டு துாக்கிலிடப்பட்டான்.
இத்தாக்குதல் சம்பவத்தின் 15-வது ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, மும்பை நகரின் முக்கிய வீதிகளில் வீர மரணமடைந்த பாதுகாப்புப் படையினரின் புகைப்படங்கள் வைக்கப்பட்டு பொதுமக்கள் மலர் துாவி அஞ்சலி செலுத்தினர்.
அதேபோல, தெற்கு மும்பையின் போலீஸ் கமிஷனர் அலுவலக வளாகத்திலுள்ள நினைவிடத்தில், மகாராஷ்டிர மாநில முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, ஆளுநர் ரமேஷ் பாய்ஸ் மற்றும் துணை முதல்வர் தேவேந்திர பட்னவீஸ் உள்ளிட்ட அமைச்சர்களும் அஞ்சலி செலுத்தினர்.
இந்த நிலையில், மும்பை தீவிரவாதத் தாக்குதலில் உயிர்த் தியாகம் செய்த பாதுகாப்புப் படை வீரர்களுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அஞ்சலி செலுத்தினார்.
இது குறித்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் பதிவில், “மும்பை தீவிரவாதத் தாக்குதலில் பாதிக்கப்பட்ட அனைவரையும் நம் தேசம் வலியுடன் நினைவு கூர்கிறது. வீர ஆன்மாக்களை கௌரவிப்பதில், நாம் இறந்தவர்களின் குடும்பங்களோடு துணை நிற்கிறோம்.
தாய் மண்ணுக்காக உயிர்நீத்த வீரம் மிகுந்த பாதுகாப்புப் படை வீரர்களுக்கு நினைவஞ்சலி செலுத்துகிறேன். அவர்களின் ஒப்பற்ற தியாகத்தை நினைவு கூர்கிறேன். எந்தவொரு பகுதியிலும், அனைத்துவித தீவிரவாதத்தையும் எதிர்கொண்டு போரிடுவதாக, நாம் எடுத்துக்கொண்ட சபதத்தை அனைவரும் மீண்டும் புதுப்பிப்போம்” என்று தெரிவித்திருக்கிறார்.
A grateful nation remembers with pain all the victims of the 26/11 Mumbai terror attacks. We stand with their families and loved ones in honouring the memory of the brave souls. I pay homage to the valiant security personnel who laid down their lives for the motherland. Recalling…
— President of India (@rashtrapatibhvn) November 26, 2023
அதேபோல, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிட்டிருக்கும் பதிவில், “மும்பை பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். கடமையின்போது உயிர்த் தியாகம் செய்த பாதுகாப்பு வீரர்களின் தியாகத்தை தேசம் எப்போதும் நினைவு கூரும்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.
My heartfelt tributes to the victims of the 26/11 #MumbaiTerrorAttacks. The nation will always remember the sacrifice of those security personnel who gave their lives in the line of duty.
— Rajnath Singh (@rajnathsingh) November 26, 2023