இஸ்ரேல் தாக்குதலில் தங்களது மூத்த மற்றும் உயர்மட்ட தளபதி ஒருவர் பலியானதாக ஹமாஸ் தீவிரவாத அமைப்பு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது.
பாலஸ்தீனத்தின் காஸா முனைப் பகுதியிலிருந்து கடந்த 2005-ம் ஆண்டு இஸ்ரேல் வெளியேறியது. இதையடுத்து, ஹமாஸ் அமைப்பினா் காஸாவில் ஆட்சியைக் கைப்பற்றினா். அப்போதிருந்து, ஹமாஸ் தீவிரவாதிகளுக்கும், இஸ்ரேல் படையினருக்கும் இடையே அவ்வப்போது மோதல் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், ஹமாஸ் தீவிரவாதிகள் கடந்த அக்டோபர் மாதம் 7-ம் தேதி இஸ்ரேல் மீது திடீா் ஏவுகணைத் தாக்குதலை நடத்தினா். மேலும், இஸ்ரேலுக்குள் ஊடுருவி ஏராளமானோரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர். அதோடு, 200-க்கும் மேற்பட்டோரை பிணைக் கைதிகளாகவும் பிடித்துச் சென்றனா்.
இதையடுத்து, காஸா மீது இஸ்ரேல், முப்படைகளையும் ஏவி விட்டுத் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் திக்குமுக்காடிப்போன ஹமாஸ் தீவிரவாதிகள், பதுங்குக் குழிகளுக்குள்ளும், சுரங்கப் பாதைகளுக்குள்ளும் பதுங்கிக் கொண்டு தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
எனினும், காஸா நகரையே உருத்தெரியாமல் இஸ்ரேல் இராணுவம் அழித்து விட்டது. இத்தாக்குதலில் குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் உட்பட 14,500 பேர் உயிரிழந்ததாகத் தெரிவித்திருக்கும் காஸா நகர சுகாதாரத்துறை, சுமார் 3,000 பேரை காணவில்லை என்றும் கூறியிருக்கிறது.
மேலும், இஸ்ரேல் தாக்குதலில் காஸா நகர மக்கள் மின்சாரம், தண்ணீர் உள்ளிட்ட அடிப்படைத் தேவைகள் இல்லாமலும், காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க போதிய மருந்துகள் இல்லாமலும் பரிதவித்து வருகின்றனர். இதனால் பலரும் உயிரிழந்து வருகின்றனர்.
ஆகவே, காஸா நகர மக்களுக்கு மனிதாபிமான அடிப்படை உதவிகளை இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளும் வழங்கி வருகின்றன. அதேசமயம், ஹமாஸ் தீவிரவாதிகளின் பிடியில் இருக்கும் பிணைக் கைதிகளை விடுவிக்க கத்தார் நாட்டின் உதவியுடன் அமெரிக்கா முயற்சி மேற்கொண்டது.
இந்த நிலையில், இஸ்ரேல் சிறைகளில் உள்ள பாலஸ்தீன கைதிகளை விடுவித்தால், பிணைக் கைதிகளை உடனடியாக விடுதலை செய்யத் தயாா் என்று ஹமாஸ் படை தெரிவித்தது. இது குறித்து அமைச்சரவைக் கூட்டி ஆலோசித்த இஸ்ரேல், பிணைக் கைதிகளை விடுவிக்க தற்காலிக போா் நிறுத்த உடன்படிக்கைக்கு சம்மதித்தது.
அதன்படி, முதல்கட்டமாக 25 பிணைக் கைதிகளை விடுவித்த ஹமாஸ் தீவிரவாதிகள், 2-வது கட்டமாக 17 பிணைக் கைதிகளை விடுவித்திருக்கிறார்கள். இஸ்ரேலும் தங்களது நாட்டு சிறையில் இருந்த 39 கைதிகளை விடுதலை செய்திருக்கிறது.
இந்த நிலையில்தான், இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் தங்களது அமைப்பின் மூத்த மற்றும் உயர்மட்டத் தளபதி ஒருவர் பலியாகி இருப்பதாக ஹமாஸ் தெரிவித்திருக்கிறது. ஆயுதப் பிரிவின் உயர்மட்ட உறுப்பினராகவும், வடக்கு காஸாவில் உயர்மட்டத் தளபதியாகவும் பதவி வகித்த அகமத் அல் கந்தூர் என்பவர்தான் பலியாகி இருக்கிறார்.
எனினும், இவர் எப்போது, எங்கு கொல்லப்பட்டார் என்கிற தகவலை ஹமாஸ் வெளியிடவில்லை. அதேசமயம், இஸ்ரேல் இவரை கொல்ல பலமுறை முயற்சி செய்து தோல்வியடைந்ததாகத் தகவல் வெளியாகி இருக்கிறது.