கடந்த 25 வருடங்களாக 1,500-க்கும் மேற்பட்ட ஏழைக் குழந்தைகளுக்கு உதவி செய்து வரும் தமிழரான லோகநாதன் என்பவரை பாரதப் பிரதமர் நரேந்திர மோடி பாராட்டி இருக்கிறார்.
பாரதப் பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமையில் மனதின் குரல் (மன் கி பாத்) என்கிற நிகழ்ச்சி மூலம் அகில இந்திய வானொலி வாயிலாக நாட்டு மக்களிடம் உரையாற்றி வருகிறார். அப்போது, காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையிலான நாட்டு மக்களின் சேவைகளை பாராட்டுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.
அந்த வகையில், இன்று மனதின் குரல் (மன் கி பாத்) நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, தனது சிறுவயது முதலே தனது ஊதியத்தில் ஒரு பகுதியை ஏழைக் குழந்தைகளுக்கு கொடுத்து உதவி வரும் தமிழகத்தின் கோவை மாவட்டம் சூலூர் அருகேயுள்ள அப்பநாயக்கன் பட்டியைச் சேர்ந்த லோகநாதன் என்பவரை பாராட்டி இருக்கிறார்.
இதுகுறித்து பிரதமர் மோடி பேசுகையில், “நண்பர்களே நான் எப்போதும் ஒன்றை உறுதியாகக் கூறி வருகிறேன். இருக்கும் இடத்தை தூய்மையாக வைத்துக் கொள்வது என்பது ஒருநாள் அல்லது ஒரு வாரத்துக்கான பிரசாரம் என்பது இல்லை. இது வாழ்நாள் முழுவதும் செயல்படுத்தப்பட வேண்டிய முயற்சியாகும்.
அந்த வகையில், தமிழகத்தின் கோவையில் வசித்து வரும் லோகநாதன் குறித்து நான் உங்களிடம் கூற விரும்புகிறேன். இவர், தனது சிறு வயதில் இருந்தே ஏழைக் குழந்தைகள் கிழிந்த ஆடைகள் அணிவதைப் பார்த்து மனம் உடைந்தார்.
இதனால், ஏழைக் குழந்தைகளுக்கு உதவி செய்ய முடிவு செய்தவர், தனது சம்பாத்தியத்தில் ஒரு பகுதியை ஏழை குழந்தைகளுக்கு வழங்கத் தொடங்கினார். பணப் பற்றாக்குறை ஏற்பட்டபோதும்கூட லோகநாதன் கழிப்பறைகளை சுத்தம் செய்து பணம் சம்பாதித்து வழங்கி வருகிறார்.
கடந்த 25 ஆண்டுகளாக லோகநாதன் முழு அர்ப்பணிப்புடன் இப்பணியில் ஈடுபட்டு வருகிறார். இதுவரை 1,500-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு உதவி செய்திருக்கிறார். அவரது இந்த முயற்சிக்காக மீண்டும் ஒருமுறை பாராட்டுகிறேன்.
நாடு முழுவதும் நடக்கும் இது போன்ற பல முயற்சிகள் நமக்கு ஊக்கமளிப்பதோடு மட்டுமல்லாமல், புதிதாக ஏதாவது செய்ய வேண்டும் என்ற விருப்பத்தையும் தூண்டுகின்றன” என்று புகழ்ந்து பேசினார்.
லோகநாதன் 10 வயதிலேயே தனது தந்தையை இழந்தவர். இவரது தாயார் தான், இளநீர் வியாபாரம் செய்து லோகநாதன் உட்பட 3 குழந்தைகளையும் காப்பாற்றினார். 3 பேரையும் படிக்க வைக்க முடியாத நிலையில், லோகநாதன் 6-ம் வகுப்போடு படிப்பை நிறுத்தி விட்டார்.
இதன் பிறகு தாய்க்கு உதவுவது, கிடைத்த வேலைகளை செய்வது என்று இருந்து வந்தார். வட மாநிலங்களுக்கு அடிக்கடி சென்று வந்த வகையில், தொழிலாளர்கள், குழந்தைகள் படும் கஷ்டத்தைப் பார்த்து உதவி செய்யத் தொடங்கினார். இதற்காக கழிப்பறையை சுத்தம் செய்து குழந்தைகளுக்கு உதவி செய்து வருகிறார்.