சனாதன தர்மத்திற்கு எதிரான கருத்துகளுக்கு உரிய பதிலடி தர வேண்டும் என தாய்லாந்தில் நடைபெற்ற உலக ஹிந்து மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் உலக இந்து மாநாடு 2023 நவம்பர் 24ஆம் தேதி தொடங்கி 3 நாட்கள் நடைபெற்றது.
இம்மாநாட்டில், ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பகவத், பொதுச் செயலாளர் தத்தாத்ரேய ஹொசபலே, வி.ஹெச்.பி. பொதுச் செயலாளர் மிலிந்த் பராண்டே, இணைப் பொதுச் செயலாளர் சுவாமி விஞ்ஞானானந்தா, உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தாய்லாந்து பிரதமர் ஸ்ரேத்தா தவிசின் துவக்கி வைத்த இந்த மாநாட்டில், 61 நாடுகளைச் சேர்ந்த 2,100க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
இதில், உலகம் முழுதும் உள்ள ஹிந்து அமைப்புகளை ஒருங்கிணைத்து வலுப்படுத்த வேண்டும் எனவும், சனாதன தர்மத்திற்கு எதிரான கருத்துகளுக்கு உரிய பதிலடி தர வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்து மதத்தின் மீது நடந்து வரும் தாக்குதல்களைக் கண்டித்ததுடன், இதுபோன்ற மதவெறியில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக உலகெங்கிலும் உள்ள இந்துக்கள் ஒன்றுபட்டு வெற்றி பெற வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
நிகழ்ச்சியின் முடிவில் உலக ஹிந்து மாநாட்டின் நிறுவனர் சுவாமி விஞ்ஞானானந்தா பேசினார். அப்போது, கொரோனா காலக்கட்டத்தின் போது இந்துக்களை ஒருங்கிணைப்பதில் சுணக்கம் ஏற்பட்டதாகவும், தற்போது இச்செயல்பாடு புத்துயிர் பெற்றுள்ளதாகவும் அவர் கூறினார்.
கிறிஸ்துவ அமைப்புகளின் பிடியில் உள்ள இந்து கோவில் நிலங்களை மீட்க வேண்டும் என்றும், அதற்கான சட்ட ரீதியிலான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.