சேலம் மாவட்டம் ஓமலூரில் தகவல் உரிமை ஆர்வலர் திருமுகன் என்பவர் மீது, திமுகவினர் தூண்டுதலின் பேரில் மர்ம நபர்கள் கொடூர தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் ஓமலூர் தும்பிப்பாடி கிராமத்தை சேர்ந்தவர் தகவல் உரிமை அறியும் ஆர்வலர் திருமுருகன். இவர், தங்கள் பகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெற்ற சாலை வசதி, குடிநீர் வசதி, மின்சார வசதி, அரசு நலத்திட்ட உதவிகள் ஆகியவை குறித்து, தகவல் உரிமை சட்டம் மூலம் பெற்று, முறைகேடுகளை அம்பலப்படுத்தினார்.
இதேபோல, அருகில் உள்ள ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சிகளிலும் தகவல் கேட்டுப் பெற்று, முறைகேடுகளை பொது வெளியில் வெளியிட்டார்.
இதனால், திமுகவினர் மற்றும் அதிகாரிகள் செய்த ஊழல் மற்றும் முறைகேடுகள் வெளிச்சத்திற்கு வந்தது. இதனால், ஆவேசம் அடைந்த திமுகவினர் தகவல் ஆர்வலர் திருமுருகனை மிரட்டியுள்ளனர்.
இதனிடையே, கடந்த சில தினங்களுக்கு முன்னர் தகவல் ஆர்வலர் திருமுருகன் மீது, திமுகவினர் தூண்டுதலின் பேரில் மர்ம நபர்கள் கொடூர தாக்குதல் நடத்தியுள்ளனர்.
து தொடர்பாக, காவல் நிலையத்தில் புகார் அளித்தும், வழக்குப் பதிவு செய்யவில்லை என கூறப்படுகிறது.
இந்த நிலையில், தகவல் ஆர்வலர் திருமுருகன் மீது கொடூர தாக்குதல் நடத்திய சமூக விரோதிகள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யக்கோரியும், தகவல் அலுவலர்களுக்குப் பாதுகாப்பு வழங்கக் கோரியும் பத்து ரூபாய் இயக்கம் மற்றும் பல்வேறு அமைப்புகளின் சார்பில் சேலம் கோட்டை மைதானத்தில் கண்டன ஆர்ப்பாட்டமும், நீதி கேட்கும் போராட்டமும் நடைபெற்றது.
இந்த போராட்டத்திற்கு பத்து ரூபாய் இயக்க பொதுச் செயலாளர் வழக்கறிஞர் நல்வினை விஸ்வராஜ் தலைமை தாங்கினார். நீதி கேட்டு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டு திமுக அரசுக்கு எதிராக தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர்.