உத்தரகாண்ட் சுரங்கத்தில் சிக்கியுள்ள 41 தொழிலாளர்களை மீட்புப்பணி தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் சுரங்கத்தில் சிக்கியிருந்த ஆகர் இயந்திரத்தின் பாகங்களை வெட்டி அகற்றும் பணி நிறைவடைந்துள்ளது.
உத்தரகாசி சில்க் யாரா சுரங்கப்பாதையில் சிக்கியுள்ள 41 தொழிலாளர்களை மீட்கும் பணி 16-வது நாளை எட்டியுள்ளது. இந்நிலையில் மீட்புப் பணிகளை பார்வையிட்ட மத்திய அமைச்சர் வி.கே. சிங் உத்தரகாசியில் சில்க் யாரா சுரங்கப்பாதையின் முகப்பில் கட்டப்பட்ட கோவிலில் பிரார்த்தனை செய்தார்.
இதேபோல் மீட்புப்பணிகளை ஆய்வு செய்த பிரதமரின் முதன்மை செயலாளர் டாக்டர் பி.கே.மிஸ்ரா சுரங்கத்தில் சிக்கியுள்ள தொழிலாளர்கள் மற்றும் உறவினர்களுடன் பேசினார்.
இந்நிலையில், சுரங்கப்பாதைக்குள் சிக்கிய ஆகர் இயந்திரத்தின் பாகங்களை வெட்டி அகற்றும் பணி நிறைவடைந்துள்ளது. இதனையடுத்து இராணுவ வீரர்கள் உதவியுடன் மனிதர்கள் மூலம் கையால் துளையிடும் பணி தொடரவுள்ளதாக வெளிநாட்டு சுரங்கப்பாதை நிபுணர் கிறிஸ் கூப்பர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே மற்றொரு முயற்சியாக செங்குத்தாக துளையிடும் பணி 30 மீட்டர் முடிவடைந்துள்ளதாகவும் அவர் கூறினார்.
இதனிடையே தயார் நிலையில் உள்ள மருத்துவர்கள் குழு, சுரங்கத்தில் சிக்கியுள்ள தொழிலாளர்களுடன் தினமும் இரண்டு முறை பேசி மனநல ஆலோசனை வழங்குகிறது.
இதேபோல் தொழிலாளர்களின் குடும்ப உறுப்பினர்கள் மருத்துவ குழுவினருடன் எப்போது வேண்டுமானாலும் பேச அனுமதிக்கப்படுகிறார்கள். சுரங்கப்பாதைக்கு வெளியே உறவினர்கள் தங்குவதற்காக தற்காலிக முகாம் அமைக்கப்பட்டுள்ளது.