தெலுங்கானா மாநிலத்தை அழித்த பாவத்தின் பங்கில் பிஆர்எஸ், காங்கிரசுக்கு சம பங்கு உண்டு என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
தெலுங்கானா மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நவம்பர் 30ஆம் தேதி நடைபெறுகிறது. இதனையடுத்து அங்கு இறுதிக்கட்ட பிரச்சாரம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது.
இந்நிலையில் கரீம்நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று உரையாற்றினார். தெலுங்கானாவை அழித்ததில் காங்கிரசுக்கும், கேசிஆருக்கும் சம பங்கு உண்டு என்று அவர் கூறினார்.
காங்கிரஸ் வேட்பாளருக்கு வாக்களித்தால் அது பிஆர்எஸ் கட்சிக்கு வாக்களிப்பதற்கு சமம் என்றும், ஏனெனில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் எப்போது பி.ஆர்.எஸ்-ல் இணைவார்கள் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.
காங்கிரஸ் மற்றும் கேசிஆர் தங்களின் குழந்தைகளை பற்றித்தான் கவலைப்படுகிறார்கள் என்றும் உங்கள் பிள்ளைகளைப் பற்றி அல்ல என்று பிரதமர் கூறினார். மக்களையும், தெலுங்கானாவையும் அழிப்பதே அவர்களின் இலக்கு என்றும் மோடி குறிப்பிட்டார்.