திருச்சியில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருவதாலும், அரசு மருத்துவனைகளில் அதிகம் பேர் காய்ச்சலுக்கு சிகிச்சை எடுத்துக் கொள்வதும் பொது மக்களை பீதி அடைய வைத்துள்ளது.
தமிழ்நாட்டில் வட கிழக்கு பருவமழை தொடங்கி பல்வேறு பகுதிகளில் கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது.
இதனால், பல்வேறு மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் அதிகரித்து வருகிறது. காய்ச்சலை தடுக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த நிலையில், திருச்சி மாவட்டத்தில் பரவலான மழை காரணமாக, பல்வேறு இடங்களில் கொசு உற்பத்தி தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இதனை கட்டுப்படுத்த வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கும், மாநகராட்சி நிர்வாகத்திற்கும் பொது மக்கள் பலமுறை புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்த நிலையில், டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 50-க்கும் மேற்பட்டோர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
குறிப்பாக, அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனையில் இன்று ஒரு நாள் மட்டும், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மொத்தம் 18 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டு, அவர்கள் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது.
திருச்சியில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருவதால், பொது மக்கள் பீதியில் உள்ளனர்.