சென்னையில் பிரசித்தி பெற்ற திருக்கோவில்களில் ஒன்று மயிலாப்பூர் அருள்மிகு கபாலீஸ்வரர் திருக்கோவில். இந்த திருக்கோவிலின் பின்புறம் தெப்பக்குளம் அமைந்துள்ளது.
கபாலீஸ்வரர் திருக்குளத்தில் மீன்களும், வாத்துக்களும் அதிக அளவில் உள்ளது. திருக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் பலரும், மறக்காமல் குளத்தில் உள்ள மீன்களுக்குப் பொரி வாங்கிப் போடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
இந்த நிலையில், தெப்பகுளத்தில் இன்று ஏராளமான மீன்கள் கொத்துக்கொத்தாக செத்து மிதந்தன.
இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த பக்தர்கள் உடனே கோவில் நிர்வாகத்திற்கும், பெருநகர சென்னை மாநகராட்சிக்கும், காவல்துறைக்கும் தகவல் தெரிவித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, அங்கு வந்த அதிகாரிகள் மீன்களை உடனே அப்புறப்படுத்த உத்தரவிட்டனர். அதன் பேரில் ஊழியர்கள் செத்து மிதந்த மீன்களை அப்புறப்படுத்தினர். மேலும், இது தொடர்பாக, மீன்வளத்துறை அதிகாரிகளுக்குத் தகவல் கொடுக்கப்பட்டது.
இதனையடுத்து, திருக்கோவில் குளத்தில் இறந்த மீன்களை மீன்வளத்துறை அதிகாரிகள் ஆய்வுக்கு எடுத்து சென்றுள்ளனர்.
கோவில் குளத்தில் ஏராளமான மீன்கள் செத்துக் கிடந்து பக்தர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.