வங்கக்கடலில் காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாகி, புயலாக வலுப்பெற உள்ளது. அதற்கு, ‘மிக்ஜாம்’ என்ற பெயர் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பரவலாக கனமழை பெய்து வருகிறது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது முதல், மூன்று புயல்கள் உருவாகியுள்ளன. முதலில் உருவான தேஜ் புயல் ஓமனிலும், இதற்கு அடுத்து உருவான ஹாமூன் மற்றும் மிதிலி புயல்கள், வங்க தேசத்திலும் கரை கடந்தன.
இந்த நிலையில், அந்தமானின் தெற்கு மற்றும் அதையொட்டிய பகுதிகளில், காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளது. இது மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து, வங்கக் கடலின் தென் கிழக்கில், 29-ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும்.
பின், 48 மணி நேரத்தில் வடமேற்கு திசையில் நகர்ந்து, வங்கக் கடலின் தென்கிழக்கில் புயலாக வலுப்பெறும். இதனால், அந்தமானின் தெற்கு, தென் கிழக்கு பகுதிகளில், வடக்கு கடல் பகுதிகள் மற்றும் வங்கக் கடலின் தென்கிழக்கு, தென் மேற்கு பகுதிகளில், வரும் 1-ஆம் தேதி வரை மணிக்கு, 55 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசும்.
எனவே, மேற்கண்ட பகுதிகளுக்கு, 1-ஆம் தேதி வரை மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
காற்றழுத்த தாழ்வு பகுதி கடலில் நகரும் வேகம், திசை ஆகியவற்றை, ‘ரேடார்’ மூலமாக, இந்திய வானிலை ஆய்வு மையம் கண்காணித்து வருகிறது.
வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி, டிசம்பர், 1-ஆம் தேதிக்கு பின், புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளது. இந்த புயலுக்கு, மியான்மர் வழங்கியுள்ள, ‘மிக்ஜாம்’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது.
புயல் வடமேற்கில் நகரும்போது, நாகப்பட்டினம் முதல் ஒடிசாவின் புவனேஸ்வர் வரையிலான கடற்பகுதிகளில், கன மழையுடன் சூறாவளி காற்று வீசும் வாய்ப்புள்ளது. அதேபோல, நாகை முதல் புவனேஸ்வர் வரையிலான கடற்பகுதியில், ஒரு இடத்தில் கரை கடக்கும் வாய்ப்புள்ளது.