பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில், ரோப்கார் சேவை நாளை அதாவது, 29 -ம் தேதி ஒரு நாள் மட்டும் மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
அறுபடைவீடுகளில் மூன்றாவது படை வீடாகப் போற்றப்படும், பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலுக்கு, தமிழகம் மட்டுமல்லாது, கேரளா உள்ளிட்ட வெளி மாநிலத்தில் இருந்தும் பக்தர்கள் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்வது வழக்கம்.
பக்தர்கள் மலைக் கோவிலுக்குச் செல்ல வசதியாக, படிப்பாதை, யானைப் பாதை, மின் இழுவை இரயில் மற்றும் ரோப் கார் ஆகிய வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
இழுவை இரயிலில் 7 நிமிடங்களிலும், ரோப் காரில் 3 நிமிடங்களிலும் மலைக் கோவிலை அடையலாம். இதனால், ரோப் காரில் அதிக அளவில் பக்தர்கள் பயணம் செய்ய ஆர்வம் காட்டுகின்றனர்.
மாதந்தோறும் ஒரு முறையும், வருடாந்திர பராமரிப்பு பணிக்காக ஒரு மாதம் ரோப் கார் சேவை நிறுத்தப்படும். இந்த நிலையில், ரோப்கார் சேவை நாளை, அதாவது, 29 -ம் தேதி ஒரு நாள் மட்டும் மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக இயங்காது எனத் திருக்கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, அதற்கு தகுந்தார்போல் பக்தர்கள் தங்களது பயணத்திட்டத்தை வகுத்துக் கொள்ள வேண்டும்.