50 பிணைக் கைதிகளை விடுவிக்க ஹமாஸ் – இஸ்ரேல் இடையே 4 நாட்கள் போர் நிறுத்தம் செய்யப்பட்டிருந்த நிலையில், கூடுதலாக 10 பிணைக் கைதிகளை விடுவிக்க மேலும் 2 நாட்களுக்கு போர் நிறுத்தம் நீட்டிக்கப்பட்டிருக்கிறது.
இஸ்ரேல் நாட்டின் மீது பாலஸ்தீனத்தைச் சேர்ந்த காஸா நகரின் ஹமாஸ் தீவிரவாதிகள், கடந்த அக்டோபர் மாதம் 7-ம் தேதி திடீர் ஏவுகணைத் தாக்குதல் நடத்தினர். மேலும், இஸ்ரேலுக்குள் ஊடுருவி ஏராளமானோரை சுட்டுக் கொன்றதோடு, 200-க்கும் மேற்பட்டோரை பிணைக் கைதிகளாகவும் பிடித்துச் சென்றனர். இத்தாக்குதலில் இஸ்ரேலில் வெளிநாட்டினர் உட்பட 1,400 பேர் உயிரிழந்தனர்.
இதையடுத்து, ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு எதிரான போரை இஸ்ரேல் தொடங்கியது. விமானப்படை, கப்பல்படை, தரைப்படை என முப்படைகளையும் ஏவிவிட்டு நடத்தி வரும் தாக்குதலில் காஸா நகரமே உருக்குலைந்து போய்க் கிடக்கிறது. பலி எண்ணிக்கை 15,000 பேரை நெருங்கி இருக்கும் நிலையில், 25,000 பேர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
மேலும், ஹமாஸ் தீவிரவாதிகளின் தலைமையகம் உட்பட 1,500 தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டிருப்பதோடு, ஹமாஸ் அமைப்பின் முக்கியத் தலைவர்கள் மற்றும் தளபதிகள் உட்பட 1,000-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகளும் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.
அதேபோல, ஹமாஸ் தீவிரவாதிகளின் பதுங்குக் குழிகள், சுரங்கப் பாதைகளையும் இஸ்ரேல் இராணுவம் கண்டுபிடித்து அழித்திருக்கிறது.
இதனிடையே, பிணைக் கைதிகளை விடுவிப்பது தொடர்பாக கத்தார் நாட்டு உதவியுடன் அமெரிக்கா முயற்சி மேற்கொண்டது. இதன் பயனாக 50 பிணைக் கைதிகளை விடுவிக்க 4 நாட்கள் போர் நிறுத்தம் செய்ய உடன்பாடு ஏற்பட்டது. அதன்படி, ஹமாஸ் பிணைக் கைதிகளை விடுவித்தது. பதிலுக்கு இஸ்ரேல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த கைதிகளை அந்நாடு விடுவித்தது.
இந்த நிலையில், போர் நிறுத்த ஒப்பந்தம் இன்று காலையுடன் நிறைவடைந்தது. அதேசமயம், போர் நிறுத்த ஒப்பந்தம் காலாவதியானதும் போர் தொடரும் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்திருந்தார். எனவே, கத்தார் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் போர் நிறுத்தத்தை நீட்டிக்க பேச்சுவார்த்தை நடத்தின. இதன் பலனாக மேலும் 2 நாட்களுக்கு போர் நிறுத்தம் நீட்டிக்கப்பட்டிருக்கிறது.
போர் நிறுத்தம் செய்யப்பட்ட 4 நாட்களுக்குப் பிறகு, ஒவ்வொரு 10 பிணைக் கைதிகளை விடுவிக்க கூடுதலாக ஒரு நாள் போர் நிறுத்தம் நீட்டிக்கப்படும் என்று இஸ்ரேல் ஏற்கெனவே அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.