2025 சாம்பியன்ஸ் ட்ராபி தொடரில் விளையாட இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்லுமா? என்பது குறித்து இப்போதே பிரச்னையை கிளப்பி, சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு (ஐசிசி) அழுத்தம் கொடுத்து மிரட்டி வருகிறது பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பு.
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் தற்போது இந்தியாவில் நடந்து முடிந்த நிலையில், இந்த தொடருக்கு முன்னர் ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்றது.
ஆசிய கோப்பை பாகிஸ்தானில் நடத்த முடிவெடுத்திருந்த நிலையில் இந்திய அணி பாகிஸ்தான் செல்ல மறுத்ததால் அந்தத் தொடர் பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் நடைபெற்றது.
இந்நிலையில் 2025 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் ட்ராபி தொடர் பாகிஸ்தானில் நடைபெறவுள்ளது. இந்த தொடருக்கு இந்திய அணி தகுதி பெற்றுள்ள நிலையில் இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்லுமா? என்பது குறித்து இப்போதே பிரச்னையை கிளப்பி இருக்கிறது பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பு.
ஆசியக் கோப்பையில் இந்தியா பாகிஸ்தான் செல்லாமல் மறுப்பு தெரிவித்ததால் போட்டி இலங்கைக்கும் மாற்றப்பட்டது அதே போலவே சாம்பியன்ஸ் ட்ராபி தொடரிலும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் வராமல் தொடரை வேறு நாட்டுக்கு மாற்றுமாறு கோரிக்கை வைக்கலாம் என சந்தேகத்தில் உள்ளது பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பு.
பிசிசிஐ அதிகாரிகள் இது குறித்து கடந்த காலங்களில் பதில் அளிக்கும் போதெல்லாம் பாகிஸ்தான் நாட்டுக்கு இந்திய கிரிக்கெட் அணி செல்வது குறித்து இந்திய அரசு தான் இறுதி முடிவு எடுக்கும் என கூறி உள்ளது. எனவே, இந்திய அணி, பாகிஸ்தான் செல்வதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளன.
அதே சமயம், பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு ஏற்கனவே ஆசியக் கோப்பை தொடரை வேறு நாட்டுக்கு மாற்றிய அதிருப்தியில் இருப்பதால், சாம்பியன்ஸ் ட்ராபி ஒப்பந்தத்தை சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுடன் இறுதி செய்யாமல் உள்ளது.
ஒருவேளை இந்திய அணி, பாகிஸ்தான் வரவில்லை என்றால் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்புக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என அழுத்தம் கொடுக்கத் துவங்கி உள்ளது.
அதேப்போல, இந்தியா வரவில்லை என்றால் தொடரை இடம் மாற்றுவது குறித்து தன்னிச்சையாக முடிவு எடுக்கக் கூடாது எனவும் உஷாராக ஒப்பந்தத்தில் இந்த விதிமுறைகளை சேர்க்க வேண்டும் என மிரட்டி வருகிறது பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பு.
ஒருவேளை இந்திய அணி, சாம்பியன்ஸ் ட்ராபி தொடரில் பங்கேற்காமல் போனால் அந்த தொடரை நடத்தும் பாகிஸ்தான் மற்றும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இரு தரப்புக்கும் விளம்பர வருவாய், ஒளிபரப்பு வருவாய் உள்ளிட்டவற்றில் பெரும் நஷ்டம் ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.