பப்புவா நியூ கினியாவில் வடக்கு கடற்கரையில் இன்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 6.5 ஆக பதிவாகியுள்ளது.
இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து உலகின் பல்வேறு பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. இதனால், உலகின் சில நாடுகள் நிலைகுலைந்துள்ளன.
கடந்த மாதம் ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால், கட்டட இடிபாடுகளில் சிக்கி ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். இதேபோல், நவம்பர் 3-ஆம் தேதி இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால், 150-க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்தனர்.
இந்தநிலையில், பப்புவா நியூ கினியாவில் வடக்கு கடற்கரையில் இன்று காலை 8.46 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. பசிபிக் தீவு மாநிலத்தின் கிழக்கு செபிக் மாகாணத்தின் தலைநகரான வெகாக் நகரத்திலிருந்து சிறிது தொலைவில் உள்ள கடற்கரையிலிருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில், 12 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கம் காரணமாக, சுனாமி அச்சுறுத்தல் எதுவும் விடுக்கப்படவில்லை. பப்புவா நியூ கினியாவில் நிலநடுக்கம் அடிக்கடி ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.