சென்னை – இரஷ்யா இடையே, புதிய சரக்கு கப்பல் போக்குவரத்து தொடங்குவதற்கான, இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை, அடுத்த மாதம் முதல் வாரத்தில் தொடங்க உள்ளதாக சென்னை துறைமுக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து, சென்னை துறைமுக அதிகாரிகள் கூறியதாவது, மும்பையில் நடந்த கடல்சார் மாநாட்டில், ரூ. 10 இலட்சம் கோடி மதிப்பிலான, 360 ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.
இதில், இந்திய துறைமுகங்களை மேம்படுத்த மட்டும், 1 இலட்சத்து 5 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்கள் உருவாக்கப்பட்டு உள்ளன.
தமிழகத்தில் சென்னை துறைமுகம், தூத்துக்குடி வ.உ.சி துறைமுகம், காமராஜர் துறைமுகம் ஆகியவற்றை மேம்படுத்தவும், கப்பல் போக்குவரத்து துறையில் புதிய தொழில்நுட்பங்களை புகுத்தவும், பல்வேறு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
துறைமுகங்களை நவீனமாக்கி, ஏற்றுமதி, இறக்குமதியை அதிகரிக்க பல்வேறு நாடுகளுடன் பேச்சு நடந்து வருகிறது. இரஷ்யாவில் இருந்து சென்னைக்கு புதிய சரக்கு கப்பல் போக்குவரத்தை தொடங்க ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இரஷ்யாவில் இருந்து இரும்பு உருக்குவதற்கான நிலக்கரி, இயற்கை எரிவாயு, உரங்கள், கச்சா எண்ணெய் மற்றும் கன்டெய்னர்களை கையாளும் வகையில், இந்த சரக்கு கப்பல் இயக்க திட்டமிட்டுள்ளோம்.
இது தொடர்பான இரண்டாம் கட்ட பேச்சு அடுத்த மாதம் முதல் வாரத்தில் நடக்க உள்ளது. இரஷ்ய அதிகாரிகளும், சென்னை, எண்ணுார் துறைமுகங்களை நேரில் வந்து பார்வையிட உள்ளனர் என்று தெரிவித்தனர்.