விஜய் ஹசாரே கோப்பைக்கான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் தமிழக அணி 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் பெங்கால் அணியை வீழ்த்தியது.
விஜய் ஹசாரே கோப்பைக்கான ஒருநாள் கிரிக்கெட் போட்டி இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதில் மொத்தமாக 38 அணிகள் பங்கேற்றுள்ளது.
இந்த 38 அணிகளும் 5 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதலிடம் பிடிக்கும் அணிகள், 2-வது இடம் பெறும் ஒரு சிறந்த அணி என்று 6 அணிகள் நேரடியாக கால் இறுதிக்கு தகுதி பெறும்.
இந்நிலையில் மொத்தம் 135 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் நேற்று மட்டும் மொத்தமாக 18 போட்டிகள் நடைபெற்றது. இதில் ஒரு போட்டியாக தமிழகம் மற்றும் பெங்கால் அணிகள் விளையாடியது.
இதில் டாஸ் வென்ற தமிழக அணி கேப்டன் தினேஷ் கார்த்திக் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனை அடுத்து களமிறங்கிய பெங்கால் அணி வீரர்கள் தமிழக பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர்.
குறிப்பாக தமிழக வீரர் நடராஜனும் சந்திப் வாரியரும் ஜோடி சேர்ந்து அபாரமாக பந்து வீசி பெங்கால் அணியின் பேட்டிங் முதுகெலும்பை உடைத்தனர்.
குறிப்பாக நடராஜன் காயத்திலிருந்து குணமடைந்து தற்போது தன்னுடைய பழைய ஸ்டைலில் பந்து வீசி எதிரணி வீரர்களை தெறிக்க விட்டார். நடராஜன் பந்துகளை தொட முடியாமல் பெங்கால் வீரர்கள் தடுமாறினர்.
நடராஜன் 5 ஓவர்கள் வீசி 20 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினார். சந்திப் வாரியர் 7 ஓவர்களில் 23 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதைப் போன்று சாய் கிஷோர், வருண் சக்கரவர்த்தி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் பாபா அப்ரஜித் இரண்டு விக்கெட்டையும் வீழ்த்தினார்.
பெங்கால் அணி 23.4 ஓவர்களில் எல்லாம் 84 ரன்களில் சுருண்டது. அதிகபட்சமாக சபாஷ் அஹமத் 20 ரன்கள் சேர்த்தார். இதனை எடுத்து 85 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தமிழக அணியும் தடுமாறியது.
சாய் சுதர்சன் 8 ரன்னிலும் பாபா அப்ரஜித் 4 ரன்களும், விஜய் சங்கர் 2 ரன்களும், கேப்டன் தினேஷ் கார்த்திக் 3 ரன்களிலும் அடுத்தடுத்த ஆட்டம் இழந்தனர்.
எனினும் தொடக்க வீரர் நாராயண ஜெகதீசன் அபாரமாக விளையாடி 45 பந்துகளில் 30 ரன்கள் சேர்த்தார். இறுதியில் பாபா இந்திரஜித் 17 ரன்களும், ஷாருக்கான் 9 ரன்களும் எடுத்து ஆட்டம் இழக்காமல் நின்றனர்.
இதனால் தமிழக அணி 5 விக்கெட் இழப்பிற்கு 85 ரன்கள் சேர்த்து விளையாடிய இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று 8 புள்ளிகள் பெற்றுள்ளது.