இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் மூன்றாம் நாள் போட்டி இன்று கவுகாத்தியில் நடைபெறவுள்ளது.
முதல் இரண்டு போட்டிகளில் இந்தியா வெற்றிப் பெற்று 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்தப் போட்டியில் வெற்றி பெற்றால் இந்திய அணிக்கே கோப்பை உறுதியாகிவிடும்.
இந்தத் தொடரை கைப்பற்றும் முனைப்பில் இந்திய அணி கடுமையாக போராடும், அதேபோல் இப்போட்டியில் தோல்வியடைந்தால் ஆஸ்திரேலியா அணி அடுத்த 2 போட்டிகளில் வெற்றி பெற்றாலும் அது வெறும் கண்துடைப்பாகவே மாறிவிடும் ஆகையால் இன்றையப் போட்டி ஆஸ்திரேலியா அணிக்கு ஒரு முக்கியமான போட்டியாகவே பார்க்கப்படுகிது.
ஐபிஎல் தொடரில் விளையாடிய அனுபவம் வாய்ந்த இளம் வீரர்கள் இந்திய அணியில் இடம்பெற்றுள்ளனர். உள்ளூர் மைதானங்களில் போட்டி நடைபெறுவது அவர்களுக்கு கூடுதல் சாதகமாக உள்ளது.
பேட்டிங்கில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும், இந்திய வீரர்கள் பந்துவீச்சில் ரன்களை வாரி வழங்குவதை கட்டுப்படுத்த வேண்டியுள்ளது.
மறுமுனையில், உலகக் கோப்பையில் விளையாடிய அணியை பெரிய மாற்றம் எதுவும் இன்றி ஆஸ்திரேலிய அணி அப்படியே களமிறக்கியுள்ளது.
இருப்பினும் அனுபவம் வாய்ந்த பந்துவீச்சாளர்கள் இல்லாமல் இருப்பது, முதல் 2 போட்டிகளிலும் ஆஸ்திரேலிய அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்தது.
கவுகாத்தி மைதானம் பேட்டிங்கிற்கு சாதகமானது என்பதால், இன்றையப் போட்டியிலும் பேட்ஸ்மேன்கள் ஆதிக்கம் செலுத்தலாம்.
இரண்டாவது பாதியில் பனி பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும் என கூறப்படுகிறது. இந்திய அணி இதுவரை இங்கு 3 டி-20 போட்டிகளில் விளையாடி ஒரு வெற்றி, ஒரு தோல்வியை பதிவு செய்துள்ளது. ஒரு போட்டிய்ல் முடிவு எட்டப்படவில்லை.
மேலும் இப்போட்டியில் வெற்றி வாய்ப்பு கணக்கெடுப்பில் இந்தியா 55 % வெற்றி பெறும் என்றும் ஆஸ்திரேலியா 45 % வெற்றி பெறும் என்றும் இணையத்தில் பதிவிடப்பட்டுள்ளது.