அமித்ஷாவை அவதூறாகப் பேசியது தொடர்பான வழக்கில், ராகுல் காந்திக்கு உத்தரப் பிரதேச மாநிலம் சுல்தான்பூர் மாவட்ட எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கான சிறப்பு நீதிமன்றம் சம்மன் அனுப்பி இருக்கிறது.
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், கேரள மாநிலம் வயநாடு தொகுதியின் எம்.பி.யுமான ராகுல் காந்தி, கடந்த 2018-ம் ஆண்டு கர்நாடக மாநில சட்டமன்றத் தேர்தலில் பிரச்சாரத்தின்போது நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கொலைக் குற்றவாளி என்பது உட்பட சில சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்தார்.
இது தொடர்பாக ராகுல் காந்தி மீது உத்தரப் பிரதேச மாநிலம் சுல்தான்பூர் மாவட்ட பா.ஜ.க. தலைவர் விஜய் மிஸ்ரா, எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் மாவட்ட மற்றும் செசன்ஸ் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருக்கிறார். இந்த வழக்கு விசாரணை நடந்து வரும் நிலையில், அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு நீதிமன்றம் சம்மன் அனுப்பி இருக்கிறது.
அந்த சம்மனில், டிசம்பர் 16-ம் தேதி ராகுல் காந்தி நேரில் ஆஜராகும்படி உத்தரவிடப்பட்டிருக்கிறது. இது குறித்து விஜய் மிஸ்ரா கூறுகையில், “பெங்களூருவில் அமித்ஷாவை ஒரு கொலைகாரர் என்று ராகுல்காந்தி குற்றம்சாட்டினார். இதனால் நான் மிகவும் வேதனையடைந்து வழக்குத் தொடர்ந்தேன். கடந்த 5 ஆண்டுகளாக வழக்கு நடந்து வந்த நிலையில் இன்று முடிவு வந்திருக்கிறது” என்றார்.
மேலும், விஜய் மிஸ்ராவின் வக்கீல் சந்தோஷ்குமார் பாண்டே கூறுகையில், “ராகுல் காந்திக்கு எதிராக போதுமான ஆதாரங்கள் கிடைத்தால், அவருக்கு அதிகபட்சமாக 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை கிடைக்கும்” என்றார்.
ஏற்கெனவே மோடி பெயர் குறித்து அவதூறாகப் பேசியதாக குஜராத் மாநிலம் சூரத் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இதனால் அவரது எம்.பி. பதவி பறிக்கப்பட்டது. இதன் பிறகு, மேல்முறையீடு செய்ததில் அவரது தண்டனையை உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.