பீகார் மாநில அரசு வெளியிட்டிருக்கும் 2024 விடுமுறை பட்டியலில் இந்து பண்டிகைகளுக்கான லீவு ரத்து செய்யப்பட்டிருப்பதற்கு பா.ஜ.க. கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறது. பீகார் அரசு இந்து விரோத அரசு கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறது.
பீகார் மாநில அரசு சார்பில், 2024-ம் ஆண்டுக்கான பள்ளி விடுமுறை நாட்கள் அடங்கிய பட்டியல் இன்று வெளியிடப்பட்டிருக்கிறது. இப்பட்டியலில் இந்து பண்டிகைகளுக்கான விடுமுறை ரத்து செய்யப்பட்டிருப்பதோடு, முஸ்லீம் பண்டிகைகளுக்கான விடுமுறை நாட்கள் அதிகரிக்கப்பட்டிருக்கிறது.
அதாவது, அரசு சார்பில் வெளியிடப்பட்டிருக்கும் இப்பட்டியலில் மகா சிவராத்திரி, ரக்ஷா பந்தன், தீஜ் மற்றும் ஜென்மாஷ்டமி போன்ற பண்டிகைகளுக்கான விடுமுறை ரத்து செய்யப்பட்டிருக்கிறது. அதேபோல, தீபாவளி, துர்கா பூஜை போன்ற பண்டிகைகளுக்கான விடுமுறை நாட்கள் குறைக்கப்பட்டிருக்கின்றன.
அதேசமயம், பக்ரீத் போன்ற இஸ்லாமியப் பண்டிகைகளுக்கு விடுமுறை நாட்கள் கூட்டப்பட்டிருக்கின்றன. ஆகவே, பீகார் அரசு முஸ்லீம் சமூகத்திற்கு மட்டும் ஆதாரவாதாக இருக்கிறது என்று பா.ஜ.க. குற்றம்சாட்டி இருக்கிறது. மேலும், இந்து பண்டிகைகளுக்கான விடுமுறையை ரத்து செய்திருப்பது ஏன் என்றும் கேள்வி எழுப்பி இருக்கிறது.
இதுகுறித்து மத்திய அமைச்சர் அஸ்வினி சௌபே தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் பதிவில், “பீகார் அரசு இந்து பண்டிகைகளுக்கான விடுமுறையை ரத்து செய்து, முஸ்லீம் பண்டிகைக்கான விடுமுறையில் ஈடு செய்திருக்கிறது. ஒருபக்கம், முஸ்லீம் பண்டிகைகளுக்கான விடுமுறை நாட்கள் நீட்டிக்கப்பட்டு, மறுபக்கம், இந்து பண்டிகைகளுக்கான விடுமுறை நாட்கள் நீக்கப்பட்டிருக்கின்றன” என்று குறிப்பிட்டிருக்கிறார்.
அதேபோல, பீகார் மாநில முன்னாள் துணை முதல்வரும், சட்டமன்ற உறுப்பினருமான சுஷில் குமார் மோடி கூறுகையில், “பீகார் கல்வித்துறை இந்துகளுக்கு எதிராக செயல்படுகிறது. இது இந்துக்களின் மத நம்பிக்கைகளைக் காயப்படுத்தும் செயலாகும்.
பீகார் முதல்வர் நிதீஷ் குமார், ஜாதிவாரிக் கணக்கெடுப்பின் மூலம் இந்துக்களின் வாக்குகளைப் பெற நினைத்தார். தற்போது, இஸ்லாமியர்களின் வாக்குகளைப் பெறுவதற்காக இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகிறார். இந்த நடவடிக்கை மூலம் பீகார் அரசு இந்துக்களுக்கு எதிரான அரசு என்பது தெரிகிறது. இந்த விடுமுறை ரத்துகளை அரசு உடனே ரத்து செய்ய வேண்டும்” என்று கூறியிருக்கிறார்.