மும்பை இந்தியன்ஸ் அணிக்கு திரும்பிய ஹர்திக்கை வரவேற்பதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம் – நீடா அம்பானி.
2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் டிசம்பர் மாதம் 19 ஆம் தேதி துபாயில் நடக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அணியில் விடுவிக்கப்படும் மற்றும் தக்கவைக்கப்படும் வீரர்களின் பட்டியலை அணி நிர்வாகங்கள் சமர்ப்பிக்க ஐ.பி.எல். அமைப்பு கொடுத்திருந்த காலக்கெடு நேற்றுடன் முடிவடைந்தது.
இதனிடையே குஜராத் அணியின் கேப்டனாக செயல்பட்ட ஹர்திக் பாண்டியாவை மும்பை இந்தியன்ஸ் அணி ரூ.15 கோடிக்கு வாங்கியுள்ளது.
இந்நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணியின் இணை நிறுவனர் நீடா அம்பானி, மும்பை இந்தியன்ஸ் அணிக்கு திரும்பிய ஹர்திக்கை வரவேற்பதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம் என்று கூறியுள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், ” ஹர்திக் பாண்டியா மும்பை இந்தியன்ஸ் குடும்பத்தில் மறுபடியும் கைகோர்ப்பது சந்தோசம். மும்பை இந்தியன்ஸ் அணியால் ஒரு திறமையான இளம் வீரராக கண்டெடுக்கப்பட்டதில் இருந்து இப்போது இந்திய அணியின் ஒரு நட்சத்திர வீரர் என்று ஹர்திக் பாண்டியா மிக உயர்ந்த நிலையை எட்டி இருக்கிறார்.
பாண்டியா மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணியின் எதிர்காலம் குறித்து நாங்கள் உற்சாகம் அடைந்துள்ளோம்.” என்று தெரிவித்துள்ளார்.