உலகின் தலைசிறந்த லீக் தொடரான ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் விளையாட வேண்டும் என்று பாகிஸ்தான் அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஹசன் அலி விருப்பம் தெரிவித்துள்ளார்.
2008 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டு இந்திய பிரீமியர் லீக் விளையாடப்பட்டு வருகிறது. 8 அணிகளுடன் தொடங்கிய ஐபிஎல் தொடரின் மதிப்பு நாளுக்கு நாள் அதிகமாகி வந்தது.
ஐபிஎல் தொடரை பார்ப்பவர்களின் எண்ணிக்கையும், தொடருக்கான விளம்பர வருவாய், ஒளிபரப்பு வருவாய் உள்ளிட்டவை கற்பனை செய்ய முடியாத அளவிற்கு வளர்ந்துள்ளது.
அதுமட்டுமல்லாமல் உலகிலேயே அதிக பணம் ஈட்டக் கூடிய இரண்டாவது விளையாட்டாக ஐபிஎல் கிரிக்கெட் தொடர் உள்ளது. அதற்கு ஐபிஎல் தொடரின் தரம், வீரர்களின் அபாரமான ஆட்டமும் காரணமாக அமைந்துள்ளது.
ஐபிஎல் தொடருக்கு பின், பாகிஸ்தானில் நடத்தப்பட்டு வரும் பிஎஸ்எல் தொடரில் அதிக பார்வையாளர்கள் மற்றும் ரசிகர்களை ஈர்த்து வருகிறது.
என்னதான் பிஎஸ்எல் தொடரில் விளையாடினாலும், பாகிஸ்தான் வீரர்களுக்கே ஐபிஎல் தொடரில் விளையாட வேண்டும் என்பதுதான் விருப்பமாக உள்ளது.
2008ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடர் பாகிஸ்தான் அணி வீரர்கள் பங்கேற்றனர். அதன்பின் இந்தியா – பாகிஸ்தான் இடையில் சுமூக உறவு இல்லாததால், பாகிஸ்தான் அணி வீரர்கள் ஐபிஎல் தொடரில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் உலகக்கோப்பைத் தொடரில் இந்தியா வந்த பாகிஸ்தான் அணி வீரர்கள் இந்திய ரசிகர்களின் அன்பு, கலாச்சாரம், உணவு என்று நெகிழ்ச்சி தெரிவித்தனர்.
இந்த நிலையில் ஐபிஎல் தொடர் குறித்து பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஹசன் அலி பேசுகையில், நான் மட்டுமல்ல, ஒவ்வொரு வீரருக்கும் ஐபிஎல் தொடரில் விளையாட வேண்டும் என்ற கனவு இருக்கும்.
உலகின் மிகச்சிறந்த லீக் தொடரில் ஐபிஎல் தொடர் முன்னிலையில் உள்ளது. ஒருவேளை வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் ஐபிஎல் தொடரில் விளையாடுவேன் என்று தெரிவித்துள்ளார்.
பிஎஸ்எல் தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் ஹசன் அலி 2வது இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.