உள்கட்டமைப்பு முன்னேற்றத்திற்கான குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக, துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா தலைமையிலான ஜம்மு காஷ்மீர் நிர்வாகக் கவுன்சில், பல்வேறு பொது நோக்கங்களுக்காக நிலத்தை மாற்றுவதற்கு ஒப்புதல் அளித்திருக்கிறது.
ஜம்மு காஷ்மீரில் தொழில்துறை, நீதித்துறை, கல்வி மற்றும் பேரிடர் மீட்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளின் உட்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கு நிலம் வழங்குவது தொடர்பாக உயர் அதிகாரிகள் கலந்து கொண்ட கூட்டம் இன்று நடந்தது. துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் நிலம் ஒதுக்கீடு செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டிருக்கிறது.
அதன்படி, ரெட்பக், குப்வாரா ஆகிய தொழில்துறை நிறுவனங்களை நிறுவுவதற்காகவும், முன்சிஃப் நீதிமன்றம், காசிகுண்ட் அனந்த்நாக், மூச்வா, புட்காமில் காவல் நிலைய கட்டுமானத்தை நிறுவுதல், ஜைன்போரா, ஷோபியானில் ஜவஹர் நவோதயா வித்யாலயா பள்ளிகள் அமைக்கவும் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது.
மேலும், சம்பா மாவட்டத்தில் தேசிய பேரிடர் மீட்புப் படை பட்டாலியன் தலைமையகத்தை நிறுவுதல் மற்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில், தேசிய வைராலஜி நிறுவனம், ஜம்முவில் வடக்கு மண்டல பிரிவு ஆகியவற்றை நிறுவுவதற்கும் நிலம் ஒதுக்கீடு செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டிருக்கிறது.
இக்கூட்டத்தில் துணை நிலை ஆளுநரின் ஆலோசகர் ராஜீவ் ராய் பட்நாகர், தலைமைச் செயலாளர் டாக்டர் அருண் குமார் மேத்தா, ஆளுநரின் முதன்மைச் செயலாளர் டாக்டர் மந்தீப் குமார் பண்டாரி ஆகியோர் கலந்துகொண்டனர்.
ரெட்பக் குப்வாராவில் தொழில்துறை வளாகத்தை நிறுவுவதற்காக, தொழில்கள் மற்றும் வர்த்தகத் துறைக்கு 85 கனல்கள் அளவுள்ள நிலத்தை மாற்ற நிர்வாகக் கவுன்சில் ஒப்புதல் அளித்தது. இத்தொழிற்பேட்டையானது 668.25 லட்சம் ரூபாய் திட்ட மதிப்பீட்டில் உருவாக்கப்படும். இது தொழிலாளர்களுக்கு நேரடி வேலை வாய்ப்புகளை உருவாக்கும். அதேசமயம், உள்ளூர் விற்பனையாளர்கள் மற்றும் இளைஞர்களுக்கு மறைமுக வேலை வாய்ப்புகளையும் வழங்குகிறது.
மற்றொரு முன்மொழிவில், முன்சிஃப் நீதிமன்ற வளாகத்தை நிறுவுவதற்காக அனந்த்நாக், வான்போ காசிகுண்டில் 20 கனல் அளவு நிலத்தை மாற்றுவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த புதிய முன்சிஃப் நீதிமன்ற வளாகம் நீதித்துறை அதிகாரிகள், வழக்குரைஞர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் பொதுமக்களுக்கு சிறந்த வசதிகளை உறுதி செய்யும்.
அதேபோல, ஜவஹர் நவோதயா வித்யாலயா (ஜே.என்.வி) அமைப்பதற்காக பள்ளிக் கல்வித் துறைக்கு ஆதரவாக ஷோபியானின் ஜைனாபோராவில் அமைந்துள்ள 90 கனல்கள் மற்றும் 10 மார்லாக்கள் நிலத்தை மாற்றுவதற்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இது குழந்தைகளின் சிறந்த எதிர்கால வாய்ப்புகளுக்காக கல்விச் சூழலில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை உறுதி செய்யும்.
மேலும், பேரிடர் முன்னெச்சரிக்கையை வலுப்படுத்தும் வகையில், பட்டாலியன் தலைமையகத்தை அமைப்பதற்காக, தேசிய பேரிடர் மீட்புப் படைக்கு ஆதரவாக, சம்பா மாவட்டத்தில் 568 கானல்கள் அளவுள்ள அரசு நிலத்தை மாற்றுவதற்கு ஒப்புதல் அளித்தது.
ஜம்மு காஷ்மீர் பல்வேறு பேரிடர் அபாயங்களுக்கு உள்ளாகும் நிலையில், தேசிய பேரிடர் மீட்புப் படையின் இருப்பு முக்கியமானது. தற்போது, ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக்கிற்காக நியமிக்கப்பட்ட தேசிய பேரிடர் மீட்புப் படையின் 13வது பட்டாலியன், பஞ்சாப்பில் உள்ள லடோவலிலிருந்து தற்காலிகமாக செயல்பட்டு வருகிறது.
இது தவிர, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில், தேசிய வைராலஜி நிறுவனம், சுகாதார ஆராய்ச்சித் துறை, சுகாதாரம் மற்றும் குடும்ப அமைச்சகம் ஆகியவற்றிற்கு ஆதரவாக ஜம்மு, நக்ரோட்டா, ஜம்முவில் அமைந்துள்ள 41 கனல்கள் மற்றும் 04 மார்லாக்கள் நிலத்தை மாற்றவும் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இது, ஜம்முவில் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் வைராலஜி (என்ஐவி) பிரிவை நிறுவுவது, தொற்றுநோயியல் மற்றும் நோயறிதல் கருவிகளைப் பயன்படுத்துவதன் மூலம் வைரஸ் நோய் வெடிப்புகளை நிவர்த்தி செய்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது. தவிர, இது தனிநபர்கள், சமூகம், மருத்துவக் கல்லூரிகள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களுக்குப் பரிந்துரைக்கப்பட்ட நோயறிதல் சேவைகளையும் வழங்கும்.