உத்தரகாசி சில்க்யாரா சுரங்கப்பாதையில் சிக்கியிருந்த 41 தொழிலாளர்கள் 17 நாட்களுக்கு பிறகு வெற்றிகரமாக மீட்கப்பட்டனர்.
உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசி மாவட்டத்தில் சில்க்யாரா-பர்கோட் இடையே சுமார் 4.5 கி.மீ. தூரத்துக்கு சுரங்கப்பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.கடந்த 12-ம் தேதி தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தபோது, அதிகாலை 5.30 மணி அளவில் சுரங்கப்பாதையின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்தது.
இதில் பணியில் ஈடுபட்டிருந்த 41 தொழிலாளர்கள் சுரங்கப்பாதைக்குள் சிக்கிக் கொண்டனர். இதனையடுத்து அவர்களை மீட்கும் பணி நடைபெற்றது. ஆகர் இயந்திரத்தின் மூலம் சுரங்கத்தின் பக்கவாட்டில் துளையிடும் பணி நடைபெற்றது. துளையிடும் பணி சீராக சென்றதால் தொழிலாளர்கள் விரைவில் மீட்கப்படுவார்கள் என நம்பிக்கை பிறந்தது.
ஆனால் திடீரென ஆகர் இயந்திரம் பழுதானதால் மீட்புப்பணி நிறுத்தப்பட்டது. இதனையடுத்து ஆகர் இயந்திரத்தின் சேதம் அடைந்த பிளேடுகளை வெளியே எடுக்கும் பணி நடைபெற்றது.
இதனிடையே தொழிலாளர்களுக்கு உணவு, குடிநீர், ஆக்ஜிசன் உள்ளிட்டவை தொடர்ச்சியாக வழங்கப்பட்டு வந்தது. மேலும் தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு மன நல ஆலோசனைகளும் வழங்கப்பட்டு வந்தன.
இதனிடையே உத்தரகாண்ட் முதலமைச்சரை நாள்தோறும் தொடர்பு கொண்ட பிரதமர் நரேந்திர மோடி மீட்பு பணி நிலவரம் குறித்து கேட்டறிந்தார். மேலும் மீட்பு பணிகளை துரித்துப்படுத்துமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.
ஆகர் இயந்திரம் பழுதானதால், செங்குத்தாக துளையிட்டு (vertical drilling) 41 உழியர்களை மீட்பது என முடிவு செய்யப்பட்டது. இதனையடுத்து ஒருபுறம் செங்குத்தாக துளையிடும் பணியும் நடைபெற்று வந்தது.
மறுபுறம் ஆகர் இயந்திர பிளேடுகளை அகற்றும் பணியும் நடைபெற்று வந்தது. அதற்கு நேற்று முதல் நல்ல பலன் கிடைக்க தொடங்கியது. ஆகர் இயந்திரத்தின் பாகங்கள் முற்றிலும் அகற்றப்பட்டது. இதனைத்தொடர்ந்து அந்த துளையில் பைப் சொருகும் பணி நடைபெற்று வந்தது.
இந்நிலையில் அந்த பணி வெற்றிகரமாக நிறைவடைந்த நிலையில், உள்ளே சிக்கி இருந்த தொழிலாளர்கள் 41 பேரும் பத்திரமாக இன்று மீட்கப்பட்டனர். சுரங்கப்பாதையில் இருந்து வெளியே வந்த ஊழியர்களுக்கு மாலை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது.
மீட்கப்படும் தொழிலாளர்கள் சில்க்யாராவிலிருந்து சுமார் 30 கிமீ தொலைவில் உள்ள சின்யாலிசூரில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களுக்கு அங்கு முதல்கட்ட மருத்துவ பரிசோதனை நடைபெற்றது.
அங்கு 41 ஆக்சிஜன் படுக்கைகள் அடங்கிய தனி வார்டு தொழிலாளர்களுக்காகத் தயார் செய்யப்பட்டுள்ளது.