கொலை, கொலை முயற்சி, அலட்சியம், ஏமாற்றுதல், கொள்ளை உள்ளிட்ட 46,000 வழக்குகளில் காவல்துறை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யவில்லை என அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் தவறு செய்பவர்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றனர். அதே வேளையில் குற்றங்களைக் கட்டுப்படுத்தும் வகையில், போதிய காவல் நிலையங்களும், காவலர்களும் இல்லை என்று கூறப்படுகிறது.
குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தால் மட்டுமே குற்றவாளிகளுக்கு எதிரான தண்டனையை நீதிமன்றத்தில் பெற்றுத்தர முடியும். இறுதி அறிக்கை இல்லாமல் விசாரணைகள் தொடங்க முடியாது.
வழக்குகளின் நிலையை ஆய்வு செய்தல், ஆய்வக மற்றும் தடயவியல் அறிக்கைகள் பெறுவதில் தாமதம், பிரேதப் பரிசோதனை சான்றிதழ்கள் பெறுவதில் தாமதம் மற்றும் விசாரணை அதிகாரிகளை அடிக்கடி இடமாற்றம் செய்தல், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வது குறித்துப் பயிற்சி இல்லாதது ஆகியவை இது போன்ற வழக்குகள் தேங்க காரணம் எனக் கூறப்படுகிறது.
குற்றவியல் நடைமுறை சட்டத்தின் (CrPC) பிரிவு 167 -ன் படி, குற்றம் சாட்டப்பட்ட ஒருவர், போலீஸ் காவலில் வைக்கப்பட்ட நாளிலிருந்து 60 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்யத் தவறினால், அவர் இயல்பாகவே, நீதிமன்றத்தில் ஜாமீன் பெற முடியும். ஒரு சில குற்றங்களுக்கு மட்டுமே, நிர்ணயிக்கப்பட்ட காலத்தை 90 நாட்கள் வரை நீட்டிக்க முடியும்.
இதனால், சென்னை காவல்துறையின் வடக்கு மற்றும் மேற்கு மண்டலத்தில், வழக்குகளை உன்னிப்பாகக் கண்காணிக்கவும், நிலுவையில் உள்ளவற்றைக் குறைக்கவும், அதிகாரிகளுக்குச் சிவப்பு, மஞ்சள் மற்றும் பச்சை ஆகிய மூன்று வெவ்வேறு வண்ணங்களில் தாள் வழங்கப்பட்டுள்ளது.
குற்றப்பத் திரிகையைத் தாக்கல் செய்யும் தேதி நெருங்கும் போது, வண்ணக் குறியீடு தானாகவே பச்சை நிறத்தில் இருந்து மஞ்சள் நிறத்தில் இருந்து சிவப்பு நிறமாக மாறி, குற்றப்பத்திரிகை தாக்கல் செயல்முறையை விரைவுபடுத்த எச்சரிக்கிறது.
காவல் ஆய்வாளர்கள் தங்களிடம் நிலுவையில் உள்ள வழக்கு விசாரணை முடிக்க முக்கிய ஆவணமான கேஸ் டைரி பயன்படுகிறது.