சி.ஏ.ஏ. என்பது நாட்டின் சட்டம். இதை யாராலும் தடுக்க முடியாது. இச்சட்டத்தை செயல்படுத்தியே தீருவோம் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியிருக்கிறார்.
மேற்கு வங்க மாநில பா.ஜ.க. சார்பில் தர்மதாலாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால், இக்கூட்டத்திற்கு காவல்துறை அனுமதி அளிக்கவில்லை. இதையடுத்து, பா.ஜ.க. தரப்பில் கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த தனி நீதிபதி, அமித்ஷா கூட்டத்துக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டார். ஆனால், இதை எதிர்த்து கொல்கத்தா உயர் நீதிமன்றத்தின் 2 நீதிபதிகள் அடங்கிய அமர்வு முன்பு மேற்கு வங்க மாநில அரசு மேல்முறையீடு செய்தது.
இம்மனுவை விசாரித்த நீதிபதிகள் அமித்ஷ் கூட்டத்திற்கு அனுமதி அளித்ததோடு, மேற்கு வங்க மாநில அரசின் மனுவையும் தள்ளுபடி செய்தனர். இதைத் தொடர்ந்து, திட்டமிட்டபடி தர்மதாலாவில் இன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்துகொண்ட பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடந்தது.
இக்கூட்டத்தில் பேசிய அமித்ஷா, “2019 நாடாளுமன்றத் தேர்தலில் 18 மக்களவைத் தொகுதிகளையும், 2021 சட்டமன்றத் தேர்தலில் 77 எம்.எல்.ஏ.க்களையும் கொடுத்து, அடுத்த ஆட்சி பா.ஜ.க.தான் என்று முடிவு செய்த மேற்கு வங்க மக்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
எங்களது கட்சியின் தலைவர் சுவேந்து அதிகாரி, சட்டமன்றத்தில் இருந்து 2-வது முறையாக மம்தா பானர்ஜியால் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார். அவரை உங்களால் சஸ்பெண்ட் செய்யலாம். ஆனால், மேற்கு வங்க மக்களை உங்களால் அமைதிப்படுத்த முடியாது. உங்களது நேரம் முடிந்து விட்டது என்று சொல்கிறார்கள்.
நான் உங்களிடம் ஒன்று கேட்க விரும்புகிறேன், மம்தா பானர்ஜியின் ஆட்சியில் இம்மாநிலத்தில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டிருக்கிறதா? சமாதான அரசியல் நிறுத்தப்பட்டதா? அரசியல் வன்முறைகள் நின்றுவிட்டதா? ஊழல் நின்றுவிட்டதா?
நாட்டிலேயே மேற்கு வங்க மாநிலத்தில்தான் அதிக அளவிலான ஊடுருவல் நடக்கிறது. இவ்வளவு ஊடுருவல் நடக்கும் மாநிலத்தில், வளர்ச்சி நடக்குமா? இதனால்தான் மம்தா பானர்ஜி சி.ஏ.ஏ. சட்டத்தை எதிர்க்கிறார். ஆனால், சி.ஏ.ஏ. என்பது நாட்டின் சட்டம். அதை யாராலும் தடுக்க முடியாது. அச்சட்டத்தை நாங்கள் செயல்படுத்துவோம்.
பிரதமர் நரேந்திர மோடி மேற்கு வங்க மாநிலத்திற்கு லட்சங்கள், கோடிகளை அனுப்புகிறார். ஆனால், அப்பணம் ஏழை மக்களைச் சென்றடைய விடாமல் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தடுத்து விடுகிறது. இம்மாநிலத்தில் 2026-ம் ஆண்டு பா.ஜ.க. ஆட்சி அமைக்க வேண்டும் என்றால், அதற்கான அடித்தளம் 2024 மக்களைத் தேர்தலில் அமைக்கப்பட வேண்டும்” என்றார்.