விவசாய பயன்பாட்டிற்காக மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ட்ரோன்கள் வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருப்பதாக மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் கூறியிருக்கிறார்.
பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், டெல்லியிலுள்ள அவரது இல்லத்தில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித்ஷா, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரி உட்பட முக்கிய அமைச்சர் பலரும் கலந்துகொண்டனர்.
இந்த நிலையில், கூட்டம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர், “16-வது நிதிக்குழுவின் விதிமுறைகளுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருக்கிறது. பணிக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில், இந்த 16-வது நிதிக் குழுவின் விதிமுறைகள் முடிவு செய்யப்பட்டிருக்கிறது.
16-வது நிதிக் குழு தனது அறிக்கையை அக்டோபர் 2025-க்குள் சமர்ப்பிக்கும். பின்னர், இது குறித்து மத்திய அரசு முடிவெடுக்கும். இது 2026 ஏப்ரல் 1-ம் தேதி முதல் 2031 மார்ச் 31-ம் தேதி வரை செயல்படுத்தப்படும்.
அதேபோல, மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ட்ரோன்களை வழங்கும் திட்டத்திற்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருக்கிறது. அதாவது, 2023 – 24 முதல் 2025- 2026 வரையிலான தேர்ந்தெடுக்கப்பட்ட 15,000 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு விவசாய பயன்பாட்டிற்காக ட்ரோன்கள் வழங்கப்படும்.
இந்த ட்ரோன்கள் விவசாயிகளுக்கு வாடகைக்கு விடப்படும் சேவைகளை வழங்கும். மேலும், கடந்த 5 ஆண்டுகளில் சுமார் 13.50 கோடி இந்தியர்கள் வறுமைக் கோட்டிலிருந்து விடுபட்டிருக்கிறார்கள். இது மோடி அரசின் மிகப்பெரிய சாதனையாகும்” என்றார்.