எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள், மத்திய அரசின் தீவிர முயற்சியால் விடுதலை செய்யப்பட்ட நிலையில், இன்று சென்னை வந்தடைந்தனர்.
இராமேஸ்வரம் மற்றும் மண்டபத்தைச் சேர்ந்த மொத்தம் 64 மீனவர்கள் கடந்த அக்டோபர் மாதம் எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையினரால் மூன்று வெவ்வேறு இடங்களில் கைது செய்யப்பட்டனர்.
அவர்களது படகுகள் மற்றும் மீன்பிடி வலைகளும் இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டன. தொடர்ந்து, மீனவர்களை இலங்கை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதனை அடுத்து தமிழக மீனவர்களை மீட்க பாரத பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு தீவிர முயற்சிகளை மேற்கொண்டது.
இலங்கையில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து 63 மீனவர்கள் விடுவிக்கப்பட்டனர். இரண்டாவது முறையாக கைது செய்யப்பட்டதாகக் கூறப்படும் மீனவர் ஒருவருக்கு இலங்கை நீதிமன்றம் இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது.
இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் மீனவர்களைத் தமிழகம் அனுப்ப ஏற்பாடு செய்தது. அதன்படி, நவம்பர் 21-ஆம் தேதி 15 மீனவர்களும், நவம்பர் 23-ஆம் தேதி 15 மீனவர்களும், நவம்பர் 24-ஆம் தேதி 12 மீனவர்களும் தமிழகம் வந்தடைந்தனர்.
42 மீனவர்கள் தமிழகம் வந்த நிலையில், மீதமிருந்த 21 மீனவர்களும் விமானம் மூலம் இன்று சென்னை வந்தடைந்தனர். அவர்களை தமிழக பாஜக நிர்வாகிகள் சால்வை அணிவித்து வரவேற்றனர்.
தமிழக மீனவர்களை மீட்க தீவிர முயற்சி மேற்கொண்ட, பாரத பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு மீனவர்கள் நன்றி தெரிவித்தனர்.