இலங்கையிலிருந்து கடல் வழியாகக் கடத்தி வரப்பட்ட, ரூபாய் 2 கோடியே 15 இலட்சம் மதிப்பிலான, 3 ½ கிலோ தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இராமேஸ்வரத்திலிருந்து மஞ்சள், பீடி உள்ளிட்டவை கடல் வழியாக இலங்கைக்குக் கடத்தப்பட்டு வருகிறது. அதேபோல் இலங்கையிலிருந்து தமிழகத்திற்கு தங்கம் உள்ளிட்டவைகள் கடத்தி வரப்படுகிறது.
இதனைத் தடுப்பதற்காக இந்தியக் கடலோர காவல் படையினர் அதிநவீன படகுகள் மூலம் ரோந்து பணிகளில் ஈடுபடுகின்றனர்.
இந்த நிலையில், இலங்கையிலிருந்து இராமேஸ்வரத்திற்கு தங்கம் கடத்தப்பட இருப்பதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், சுங்கத்துறையினர், இராமேசுவரத்தில் முகாமிட்டு கடலோர பகுதிகளைத் தீவிரமாகக் கண்காணித்து வந்தனர். நேற்று நள்ளிரவு பாம்பன் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, சந்தேகத்திற்கிடமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த, படகை நோக்கி சென்றனர். சுங்கத்துறை அதிகாரிகள் வருவதைப் பார்த்ததும், படகில் இருந்து 4 மர்மநபர்கள் தப்பி ஓடினர். இதைத்தொடர்ந்து, படகை சோதனை செய்த அதிகாரிகள், படகில் மறைத்து வைக்கப்பட்டிருந்த, ரூபாய் 2 கோடியே 15 இலட்சம் மதிப்பிலான, 3 ½ கிலோ எடையுள்ள தங்கத்தைக் கண்டுப்பிடித்தனர்.
இதை அடுத்து, 3 ½ கிலோ தங்கம் மற்றும் நாட்டுப்படகை பறிமுதல் செய்தனர். தங்கம் கடத்தி வந்த மர்ம நபர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.