மணிப்பூரில் பழமையான ஆயுதக்குழுவான ஐக்கிய தேசிய விடுதலை முன்னணி (யு.என்.எல்.எஃப்) அமைப்புடன் இன்று அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது. இதற்கு வரவேற்புத் தெரிவித்திருக்கும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, இது வரலாற்று மைல்கல் என்று தெரிவித்திருக்கிறார்.
மணிப்பூர் மாநிலத்தில் கடந்த மே மாதம் 3-ம் தேதி முதல் மெயிட்டி மற்றும் கூகி சமூகத்தினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இது கலவரமாக வெடித்த நிலையில், கடந்த 7 மாதங்களில் 200-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
இதையடுத்து, மணிப்பூரில் அமைதியை நிலைநாட்ட, ஆயுதக் குழுக்களுடன் மத்திய, மாநில அரசுகள் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தி வந்தன. இதுகுறித்து கடந்த சில தினங்களுக்கு முன்பு பேட்டியளித்த மணிப்பூர் முதல்வர் பைரேன் சிங், “ஒரு பெரிய புரட்சிக் குழுவுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இது இறுதிக் கட்டத்தை எட்டி இருக்கிறது. விரைவில் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாகும்” என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில், மணிப்பூரைச் சேர்ந்த பழமையான ஆயுதக் குழுவான ஐக்கிய தேசிய விடுதலை முன்னணி (யு.என்.எல்.எஃப்.) அமைப்புடன் இன்று அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாகி இருக்கிறது. இதையடுத்து, ஆயுதக் குழுவினர் தங்களது ஆயுதங்களை அரசாங்கத்திடம் ஒப்படைத்தனர்.
இதைத் தொடர்ந்து, மேற்கண்ட நடவடிக்கைக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வரவேற்புத் தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து அமித்ஷா தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் பதிவில், “ஒரு வரலாற்று மைல்கல் எட்டப்பட்டிருக்கிறது!
வடகிழக்கில் நிரந்தர அமைதியை நிலைநாட்ட மோடி அரசின் இடைவிடாத முயற்சியின் பலனாக, ஐக்கிய தேசிய விடுதலை முன்னணி இன்று புதுடெல்லியில் அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருக்கிறது. இதன் மூலம் புதிய அத்தியாயம் எட்டப்பட்டிருக்கிறது.
மணிப்பூரின் பழமையான பள்ளத்தாக்கு அடிப்படையிலான ஆயுதக் குழுவான யு.என்.எல்.எஃப். வன்முறையைத் துறந்து பிரதான நீரோட்டத்தில் இணைய ஒப்புக்கொண்டிருக்கிறது.
அவர்களை ஜனநாயக செயல்முறைகளுக்கு நான் வரவேற்கிறேன். அமைதி மற்றும் முன்னேற்றப் பாதையிலான அவர்களின் பயணத்திற்கு நல்வாழ்த்துக்கள்” என்று தெரிவித்திருக்கிறார்.
மற்றொரு பதிவில், “வடகிழக்கில் அமைதியை நிலைநாட்ட நரேந்திர மோடி அரசு தொடர்ந்து பாடுபட்டு வருகிறது. மேலும், நாட்டின் தலைமைப் பொறுப்பில் மோடி இருக்கும் வரை, தேச விரோத சக்திகளால் இந்தியாவுக்கு எந்தத் தீங்கும் செய்ய முடியாது என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.
இந்திய அரசும் மணிப்பூர் அரசும் ஐக்கிய தேசிய விடுதலை முன்னணியுடன் இன்று கையெழுத்திட்ட அமைதி ஒப்பந்தம், 6 தசாப்த கால ஆயுத இயக்கத்தின் முடிவைக் குறிக்கிறது. இது பிரதமர் மோடியின் ஒரு முக்கிய சாதனையாகும்.
அனைவரையும் உள்ளடக்கிய இந்த வளர்ச்சி, வடகிழக்கு இந்தியாவில் உள்ள இளைஞர்களுக்கு சிறந்த எதிர்காலத்தை வழங்குவதற்கான மோடியின் பார்வை” என்று கூறியிருக்கிறார்.
அதேபோல, முதல்வர் பைரேன் சிங் தனது ‘எக்ஸ்’ பக்கத்தில் வெளியிட்டிருக்கும் பதிவில், “மணிப்பூரின் மிகப் பழமையான ஆயுதக் குழு, வன்முறையைக் கைவிட்டு அமைதிப் பாதையைத் தேர்ந்தெடுத்து, பிரதான நீரோட்டத்தில் சேரவும், ஜனநாயகத்தைத் தழுவவும் முடிவு செய்திருக்கிறது.
ஐக்கிய தேசிய விடுதலை முன்னணி (UNLF) புதுடெல்லியில் ஒரு அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருக்கிறது. இது வடகிழக்கில் நிரந்தர அமைதிக்கான எங்கள் இடைவிடாத முயற்சியில் குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கிறது.
பிரகாசமான மற்றும் அமைதியான வடக்கு கிழக்கிற்கு பிரதமர் நரேந்திர மோடியின் அசைக்க முடியாத ஆதரவும் தொலைநோக்கு பார்வையும்தான் இதை சாத்தியமாக்கி இருக்கிறது. இந்த கூட்டு முயற்சி மணிப்பூர் மற்றும் முழு பிராந்தியத்திற்கும் இணக்கமான மற்றும் வளமான எதிர்காலத்திற்கு பங்களிக்கட்டும்” என்று கூறியிருக்கிறார்.
The peace agreement signed today with the UNLF by the Government of India and the Government of Manipur marks the end of a six-decade-long armed movement.
It is a landmark achievement in realising PM @narendramodi Ji's vision of all-inclusive development and providing a better… pic.twitter.com/P2TUyfNqq1
— Amit Shah (@AmitShah) November 29, 2023