சென்னையில் நேற்று பெய்த கனமழையால் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.
தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும்,
காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், இராமநாதபுரம் மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும், சென்னை வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருந்தது.
இந்த நிலையில், சென்னை அசோக் நகர் லேக் வியூ சாலையில் சென்று கொண்டிருந்த மணிகண்டன் என்பவர் உயிரிழந்தார். தேங்கிய நீரில் மின்சாரம் பாய்ந்ததால் உயிரிழந்தாரா அல்லது மின்னல் தாக்கி உயிரிழந்தாரா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதேபோல், தியாகராயநகர் வாணிமஹால் அருகே சென்று கொண்டிருந்த அசாம் மாநிலத்தைச் சேர்ந்த அப்பு அணீப் என்பவர் தேங்கிய மழை நீரில் ஏற்பட்ட மின்சாரக் கசிவு காரணமாக உயிரிழந்தார்.
இதனால், பொது மக்கள் தாங்கள் செல்லும் பகுதிகளில் மின்சார ஓயர்களையும், மின் கம்பங்கள் அருகே செல்லவோ அல்லது அதை தொடவோ வேண்டாம் என்றும், மின் சாதனங்களை பயன்படுத்தும் போது மிகுந்த எச்சரிச்சகையுடன் பயன்படுத்த வேண்டும் என்றும் எச்சரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது.