தெலங்கானா மாநிலத்தில் இன்று காலை வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 20.64 சதவீத வாக்குகள் பதிவாகி இருக்கிறது.
தெலங்கானாவைப் பொறுத்தவரை, 2014-ம் ஆண்டு தனி மாநிலமாகப் பிரிக்கப்பட்டது முதல் தற்போது வரை கடந்த 10 ஆண்டுகளாக பி.ஆர்.எஸ். கட்சிதான் ஆட்சியில் இருந்து வருகிறது.
(இக்கட்சி ஏற்கெனவே தெலங்கானா ராஷ்டிர சமிதி (டி.ஆர்.எஸ்.) என்ற பெயரில் செயல்பட்டது குறிப்பிடத்தக்கது). மாநில முதல்வராக கே.சந்திரசேகர ராவ் இருந்து வருகிறார்.
கடந்த 2018-ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில், தெலங்கானா மாநிலத்தில் மொத்தமுள்ள 119 தொகுதிகளில் 88 தொகுதிகளில் பி.ஆர்.எஸ். கட்சி வெற்றிபெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைக் கைப்பற்றியது. காங்கிரஸ் 19 இடங்களிலும், தெலுங்கு தேசம் 2 இடங்களிலும், பா.ஜ.க. 1 இடத்திலும் வெற்றிபெற்றன. அதேசமயம், ஒவைசியின் ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி 7 இடங்களில் வெற்றிபெற்று ஆச்சரியப்பட வைத்தது குறிப்பிடத்தக்கது.
முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையிலான தெலங்கானா மாநில சட்டமன்றத்தின் பதவிக்காலம் டிசம்பர் மாதத்தோடு நிறைவடைகிறது. இதையடுத்து, இம்மாநிலத்துக்கு நவம்பர் 30-ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதன்படி, இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
வாக்காளர்கள் வரிசையில் நின்று வாக்குப்பதிவு செய்து வருகிறார்கள். மொத்தமுள்ள 119 தொகுதிகளுக்கும் 2,290 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். இம்மாநிலத்தைப் பொறுத்தவரை பி.ஆர்.எஸ்., காங்கிரஸ், பா.ஜ.க., ஏ.ஐ.எம்.ஐ.எம்., பகுஜன் சமாஜ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி என 6 கட்சிகள் போட்டியிடுகின்றன. எனினும், பி.ஆர்.எஸ்., காங்கிரஸ், பா.ஜ.க. ஆகிய 3 கட்சிகளுக்கிடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது.
மாநிலத்தில் 1,63,13,268 பேர் ஆண் வாக்காளர்கள், 1,63,02,261 பெண் வாக்காளர்கள் என மொத்தம் 3.26 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இவர்கள் வாக்களிக்க ஏதுவாக 35,655 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன.
119 தொகுதிகளில் நக்சல் மற்றும் மாவோயிஸ்ட் நடமாட்டமுள்ள தொகுதிகளில் மாலை 4 மணிவரையும், மீதியுள்ள 106 தொகுதிகளில் மாலை 5 மணிவரையும் வாக்கப்பதிவு நடைபெறும்.
பி.ஆர்.எஸ். 119 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தி இருக்கிறது. காங்கிரஸ் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒ்துக்கிய 1 தொகுதியைத் தவிர்த்து மீதமுள்ள 118 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தி இருக்கிறது. பா.ஜ.க. 111 தொகுதிகளிலும், பவன் கல்யாண் கட்சி 8 இடங்களிலும் வேட்பாளர்களை நிறுத்தி இருக்கின்றன.
முதல்வர் சந்திரசேகர ராவ், அவரது மகன் ராமராவ், மாநில காங்கிரஸ் தலைவர் ரேவந்த் ரெட்டி, பா.ஜ.க. தலைவர் கிஷன் ரெட்டி, எம்.பி. சஞ்சய் குமார் ஆகியோர் களம் காண்கிறார்கள்.
இந்நிலையில் இன்று காலை முதல் வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
தேர்தல் பணியில் 2.5 அதிகாரிகளும், பாதுகாப்புப் பணியில் 77,000 போலீஸாரும் ஈடுபடுத்தப்பட்டிருக்கிறார்கள். நாளை காலையில் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு வெளியாகும்.