இந்தியாவைச் சேர்ந்த பிரபல தொழில் அதிபர் அதானி, உலகக் கோடீஸ்வரர்களின் பட்டியலில் 3-ம் இடத்தில் இருந்தார். அதானி குழுமம் பங்கு மோசடி உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக ஹிண்டன்பர்க் குற்றம் சாட்டியது.
இதனால், பங்குச் சந்தைகளில் ரூ.11 லட்சம் கோடி அளவுக்கு அதானி குழுமத்துக்கு இழப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக, உலகக் கோடீஸ்வரர் பட்டியலில் 25-ம் இடத்துக்கு தள்ளப்பட்டார்.
இந்நிலையில், இது தொடர்பான வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன்னிலையில் நடைபெற்றது.
அப்போது, ஹிண்டன்பர்க் அறிக்கையை உண்மை என்று எடுத்துக்கொள்ள முடியாது என்றும், செபியை சந்தேக்க முடியாது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். இதனால், அதானி குழும நிறுவனங்களின் பங்கு மதிப்பு மீண்டும் உயர்ந்தது.
இந்நிலையில் நேற்று மட்டும், அதானி குழுமங்களின் பங்கு மதிப்பு ரூ.33 ஆயிரம் கோடி ஏற்றம் கண்டது. அதானியின் சொத்து மதிப்பு 53.8 பில்லியன் டாலராக, அதாவது ரூ.4.46 லட்சம் கோடியாக உயர்ந்தது.
இதனைத்தொடர்ந்து, உலகக் கோடீஸ்வரர்களின் பட்டியலில் அதானி 19-ம் இடத்துக்கு முன்னேறியுள்ளார்.