செங்கல்பட்டு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக, இரவு பகலாக கனமழை வெளுத்து வாங்கி வரும் நிலையில், பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்காமல் மாவட்ட நிர்வாகமும், கல்வித்துறையும் அலட்சியம் காட்டிய சம்பவம் பெற்றோர்களை கடும் அதிர்ச்சி அடையவைத்துள்ளது.
செங்கல்பட்டு, செய்யூர், குன்றத்தூர், ஸ்ரீபெரும்புதூர், திருக்கழுகுன்றம், திருவள்ளூர், ஊத்துக்கோட்டை பகுதிகளில் கன மழையால், சாலைகளில் குளம் போல் தண்ணீர் தேங்கி நிற்கிறது. வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
தொடர் மழையால், பல்வேறு பகுதிகளில் வீடுகளுக்குள் உள்ளே, வெள்ள நீர் புகுந்துள்ளதால், பொது மக்கள் அவதியடைந்துள்ளனர்.
கன மழையைக் கருத்தில் கொண்டு, குழந்தைகள் படிக்கும் பள்ளிகளுக்கு பல்வேறு மாவட்ட ஆட்சித் தலைவர்களும் விடுமுறை அளித்துள்ளனர். ஆனால், செங்கல்பட்டு மாவட்டத்தில் மட்டும் பள்ளி விடுமுறை குறித்த அரசு அறிவிப்பு கடைசி வரை வெளியாகவில்லை.
இதனால், காலையில் குழந்தைகளைக் கையிலும், வாகனத்திலும் அழைத்துக் சென்றனர். பெற்றோர்களும், குழந்தைகளும், மழையில் நழைந்தும், மழை வெள்ளத்தில் சிக்கியும் பெரும் அவதியடைந்தனர். குடையுடன் சென்ற பலரும் கனமழையால் பாதியிலே வீடு திரும்பினர்.
மழை பெய்யும் போதும் விடுமுறை அறிவிக்காததால் பெற்றோர்கள் குழப்பம் அடைந்தனர். இது தொடர்பாக, கல்வித்துறை அதிகாரிகளிடமும், மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்திலும், பொது மக்கள் முறையிட்டும் உரிய தீர்வு கிடைக்கவில்லை என கூறப்படுகிறது.
எனவே, வரும் காலத்தில், பள்ளி குழந்தைகள் விவகாரத்தில், குளறுபடிகள் நடக்காத அளவிற்குத் தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும், பள்ளி கல்வித்துறையும் உரிய தீர்வு காண வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. இல்லையெனில், போராட்டதில் ஈடுபட சமூக ஆர்வலர்கள் முடிவு செய்துள்ளனர்.