திமுக அரசு ஆட்சிக்கு வந்து 30 மாதங்கள் ஆகியும் டிஎன்டி ஒற்றை சான்றிதழ் கோரிக்கை கிணற்றில் போட்ட கல்போல் மூழ்கிய நிலையில் உள்ளது என தமிழக பாஜக-வின் ஓபிசி அணியின் மாநிலத் தலைவர் டாக்டர் சாய் சுரேஷ் குமார் குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக, தமிழக பாஜக-வின் ஓபிசி அணியின் மாநிலத் தலைவர் டாக்டர் சாய் சுரேஷ் குமார் வெளிட்டுள்ள அறிக்கையில், தமிழக பாரதிய ஜனதா கட்சி ஒபிசி அணி சார்பில் கடந்த அக்டோபர் 5 -ம் தேதி அன்று டிஎன்டி (DNT) சமுதாயத்தின் 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழக அரசின் பிற்படுத்தப்பட்ட நலத்துறை செயலாளரிடம் மனு அளித்தோம்.
தமிழகத்தில் வாழ்கின்ற 2 கோடி சீர்மரபு பழங்குடியின மக்கள், மத்திய அரசின் நல திட்டங்களை முழுமையாகப் பெறமுடியமால் அவதியுறுகின்றனர். பாஜக ஓபிசி அணி அளித்த தொடர் அழுத்தம் காரணமாக தமிழக அரசு பணிந்து, நேற்றைய தினம் சீர்மரபினர் நலவாரியத் தலைவர் மற்றும் உறுப்பினர்களை நியமனம் செய்துள்ளது. இது பாஜகவின் தொடர் முயற்சிக்கு கிடைத்த மாபெரும் வெற்றியாகும்.
மேலும், திமுக தலைவர் கடந்த சட்டமன்ற தேர்தலில் தென்காசி மாவட்டம் ஆலங்குடி தேர்தல் பரப்புரையின் போது, திமுக அரசு ஆட்சிக்கு வந்த உடன், டிஎன்டி ஒற்றைச் சான்றிதழ் அளிக்க உடனே திமுக அரசு நடவடிக்கை எடுக்கும் என்று அறிவித்தார்.
ஆனால், திமுக அரசு ஆட்சிக்கு வந்து 30 மாதங்கள் ஆகியும் டிஎன்டி ஒற்றைச் சான்றிதழ் கோரிக்கை கிணற்றில் போட்ட கல் போல் மூழ்கிய நிலையில் உள்ளது.
திமுக அரசு மத்திய அரசின் நல திட்டங்கள் டிஎன்டி மக்களிடம் சென்றடைய, சீர்மரபினர் சமூகத்தின் நீண்ட நாள் கோரிக்கையான டிஎன்டி என்ற ஒற்றைச் சான்றிதழ் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.
இல்லையெனில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் அனுமதி பெற்று, திமுக அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் மாபெரும் போரட்டம் நடைபெறும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.