அமெரிக்காவின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் ஹென்ரி கிஸிஞ்சர் நேற்று இரவு காலமானார். இவர், 2 அதிபர்களிடம் வெளியுறவு அமைச்சராக இருந்து, அந்நாட்டின் வெளியுறவுக் கொள்கைகளை வடிவமைப்பதில் முக்கியப் பங்காற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவின் முன்னாள் அதிபர்களான நிக்சன், ஜெரால்டு ஃபோர்டு ஆகியோரிடம் பணியாற்றிவர் ஹென்றி கிஸிஞ்சர். அமெரிக்க வெளியுறவுக் கொள்கையில் அழியாத முத்திரையைப் பதித்த இவர், ஒரு காலத்தில் தவிர்க்க முடியாத அதிகார மையமாக இருந்தார்.
1970-களில் பனிப்போர் நடந்த காலத்தில் கிஸிஞ்சர் அரசியல் ரீதியாக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து உலகின் கவனத்தை ஈர்த்தார். இவருக்கு 1973-ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. இது பெரும் சர்ச்சையாக வெடித்தது.
இந்த நிலையில், டாக்டர் கிஸிஞ்சர் கனெக்டிகெட்டில் உள்ள தனது வீட்டில் நேற்று இரவு காலமானதாக அவரது நிறுவனம் தகவல் வெளியிட்டிருக்கிறது. அவருக்கு வயது 100. அவரது மறைவுக்கு உலகத் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்திருக்கிறார்கள்.
ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா வெளியிட்டிருக்கும் இரங்கல் செய்தியில், ஆசியாவின் அமைதிக்கும், நிலைத்தன்மைக்கும் பெரும்பங்காற்றியவர் கிஸிஞ்சர். மேலும், அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் உள்ள உறவை வலுப்படுத்த உழைத்தவர் என்று கூறியிருக்கிறார்.
அமெரிக்காவுக்கான சீனத் தூதர் ஜி பெங் வெளியிட்டிருக்கும் இரங்கல் செய்தியில், அமெரிக்கா, சீனாவுடான நட்பை உருவாக்க கிஸிஞ்சர் துணையாக நின்றார். அவரது மறைவு இரு நாடுகளுக்கும் பேரிழப்பு. வரலாறு கிஸிஞ்சரை மறக்காது என்று குறிப்பிட்டிருக்கிறார்.
கிஸிஞ்சர் தான் பணியில் இருந்த காலத்தைக் கடந்தும் பல நிகழ்வுகளில் தொடர்ந்து கலந்து கொண்டார். ஓய்வுபெற்ற பிறகும் கூட வெள்ளை மாளிகையில் நடந்த பல்வேறு கூட்டங்களில் கலந்து கொண்டார்.
பல்வேறு புத்தங்களை வெளியிட்டிருக்கும் இவர், வடகொரியா அணுசக்தி அச்சுறுத்தல் குறித்து செனட் குழு முன்பு சாட்சியளித்தார்.
மேலும், கடந்த 2023 ஜூலை மாதம் யாரும் எதிர்பார்க்காத வகையில் திடீரென சீனா சென்று அந்நாட்டின் அதிபர் ஜி ஜின்பிங்கை நேரில் சந்தித்தார்.