ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பாட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க் போன்ற வீரர்களை வாங்க போட்டி போடும் முக்கிய அணிகள்
ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான மினி ஏலம் வரும் டிசம்பர் 19ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இந்த மினி ஏலத்தில் ஆஸ்திரேலியா அணியின் மிட்செல் ஸ்டார்க், டிராவிஸ் ஹெட், பாட் கம்மின்ஸ், நியூசிலாந்து அணியின் ரச்சின் ரவீந்திரா, டேரல் மிட்சல், தென் ஆப்பிரிக்காவின் ஜெரால்ட் கோட்சி உள்ளிட்ட வீரர்களை வாங்க முக்கிய அணிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.
அதேபோல் இந்திய வீரர்களில் ஷாரூக் கான், மணீஷ் பாண்டே, சேத்தன் சக்காரியா உள்ளிட்ட வீரர்களை வாங்க தீவிர போட்டி இருக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
அதுமட்டுமல்லாமல் பல்வேறு அணிகளுக்கும் தரமான பவுலர்கள் இல்லையென்பதால் வழக்கம் போல் இந்த மினி ஏலத்தில் பவுலர்கள் மற்றும் ஆல்ரவுண்டர்களே அதிக தொகைக்கு ஏலம் போவார்கள்.
இதில் முக்கியமான வீரராக மிட்செல் ஸ்டார்க் இருப்பார் என்று பார்க்கப்படுகிறது. 9 ஆண்டுகளுக்கு பின் ஆஸ்திரேலியா அணியின் மிட்செல் ஸ்டார்க் மீண்டும் ஐபிஎல் தொடரில் களமிறங்க உள்ளதால், எந்த அணி அவரை ஒப்பந்தம் செய்யும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
ஏனென்றால் மும்பை, ஆர்சிபி, டெல்லி, குஜராத், கொல்கத்தா மற்றும் சிஎஸ்கே அணிகளுக்கு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்களின் தேவை அதிகமாக உள்ளது.
இதனால் மிட்செல் ஸ்டார்க்கை எடுக்க பல்வேறு அணிகளும் தீவிரமாக இருக்கும் என்று பார்க்கப்படுகிறது. இருப்பினும் ஐபிஎல் தொடர் முடிவடைந்து ஒரு வாரத்தில் டி20 உலகக்கோப்பை தொடர் தொடங்க உள்ளதால், மிட்செல் ஸ்டார்க் முழு ஐபிஎல் சீசனிலும் விளையாடுவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
ஏற்கனவே ஆஸ்திரேலியா அணியின் ஹசில்வுட் தனது குழந்தை பிறப்புக்காக மனைவியுடன் இருக்க முடிவு செய்துள்ளார். இதனால் ஐபிஎல் தொடரின் முதல் 10 போட்டிகளில் விளையாட வாய்ப்பில்லை என்று பார்க்கப்படுகிறது.
இதனால் மிட்செல் ஸ்டார்க்கும் ஏலத்தில் வாங்கிய பின், முடிவை மாற்றினால் அந்த அணிக்கு பின்னடவு ஏற்படும். இதனால் 5க்கும் அதிகமான அணிகள் மிட்செல் ஸ்டார்க்கை நேரடியாக தொடர்பு கொண்டு முழு ஐபிஎல் தொடரிலும் விளையாடுவாரா என்று உறுதி செய்துள்ளனர்.