2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஐசிசி டி20 கிரிக்கெட் உலகக்கோப்பை தொடருக்கான தகுதிசுற்றில் உகாண்டா அணி வெற்றி பெற்று முதல் முறையாக உலகக்கோப்பை தொடருக்கு தகுதி பெற்றுள்ளது.
2024 ஆம் ஆண்டு ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் நடைபெறவுள்ளது. இதற்கு குறிப்பிட்ட சில அணிகள் தகுதிபெற்றுள்ள நிலையில் புதிய அணிகளுக்கான தகுதி சுற்று நடைபெற்று வந்தது.
இந்த தொடருக்கு ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து இரண்டு அணிகளை பங்கேற்க வைக்க வேண்டும் என்ற நோக்கில் ஏழு ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான ஆப்பிரிக்க பிராந்திய டி20 உலகக்கோப்பை தகுதிச் சுற்று தொடர் நடைபெற்றது.
அதில் உகாண்டா அணி தான் ஆடிய 6 போட்டிகளில் ஐந்தில் வெற்றி பெற்று அந்த தொடரின் புள்ளிப் பட்டியலில் இரண்டாம் இடம் பெற்று டி20 உலகக்கோப்பைக்கு 20 வது அணியாக தகுதி பெற்றுள்ளது.
மற்றொரு அணியாக நமிபியா தகுதி பெற்றுள்ளது. நமிபியா அணி ஏற்கனவே ஒருநாள் போட்டி உலகக்கோப்பை, டி20 உலகக்கோப்பை போன்றவற்றில் பங்கேற்றுள்ளது.
ஆனால், உகாண்டா முதல்முறையாக உலகக்கோப்பை தொடரில் பங்கேற்க உள்ளது. அந்த அணியில் ரோனக் பட்டேல், அல்பேஷ் ரம்ஜானி, தினேஷ் நக்ரானி போன்ற சில இந்திய வம்சாவளி வீரர்களும் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆப்பிரிக்க நாடுகளுக்கு இடையேயான 2024 டி20 உலகக்கோப்பை தகுதிச் சுற்றுப் தொடரில் நமிபியா, உகாண்டா, ஜிம்பாப்வே, கென்யா, ருவாண்டா, நைஜீரியா, டான்ஜானியா ஆகிய ஏழு நாடுகள் பங்கேற்றன.
இதில் ஒவ்வொரு அணியும் மற்ற ஆறு அணிகளுடன் விளையாட வேண்டும். முடிவில் புள்ளிப் பட்டியலில் முதல் இரண்டு இடங்களை பெறும் அணிகள் டி20 உலகக்கோப்பைக்கு தகுதி பெறும்.
இதில் நமிபியா இதுவரை தான் ஆடிய ஐந்து போட்டிகளிலும் வெற்றி பெற்று தனது உலகக்கோப்பை வாய்ப்பை உறுதி செய்துள்ளது, உகாண்டா தான் ஆடிய ஆறு போட்டிகளில் ஐந்தில் வெற்றி பெற்று தனது இடத்தை உறுதி செய்துள்ளது. நமிபியா அணியிடம் மட்டுமே உகாண்டா தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது.
2024 டி20 உலகக்கோப்பை வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற உள்ளது.
அந்த உலகக்கோப்பையில் பங்கேற்க தகுது பெற்றுள்ள 20 அணிகளின் பட்டியல் : வெஸ்ட் இண்டீஸ், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா, நெதர்லாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா, இலங்கை, ஆப்கானிஸ்தான், வங்கதேசம், அயர்லாந்து, ஸ்காட்லாந்து, பப்புவா நியூ கினியா, கனடா, நேபாளம், ஓமன், நமீபியா, உகாண்டா.