திமுகவும் காங்கிரஸ் கட்சியும் ஒட்டி உறவாடுவதற்கு ஊழல் என்னும் பசையே காரணம் எனப் பா.ஜ.க பிரச்சாரப்பிரிவு மாநிலத் தலைவர் குமரிகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள சமூக வலைத்தளப் பதிவில்,
கழுத தேஞ்சி கட்டெறும்பானது காங்கிரஸ்! கழுவி ஊத்தவேண்டியத, உலையில வைச்சது திமுக! இந்த இரண்டும் இப்போது கூட்டணி!
தமிழகத்தில், காங்கிரஸ் கட்சியை ஆட்சிக்கட்டிலிலிருந்து இறக்கிடத்தான் திமுக துவக்கப்பட்டது! யாரை ஊழல்வாதி என்று முத்திரைக்குத்தி காங்கிரஸ் அன்று ஆட்சியை கலைத்ததோ அதே கருணாநிதியை ஊழலின் வழிகாட்டியாக கொண்டிருக்கும் அதே திமுகவோடு இன்று காங்கிரஸ் நிரந்தர கூட்டணி! ஏன்?
அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை நிரந்தர எதிரியும் இல்லை என்பார்கள்! ஆனால் இரண்டு கட்சிகள் ஒட்டிக்கொள்வதற்கு ஒரு பசை இருக்கும்! அந்த பசை தேர்தலில் வெற்றி என்பதாக இருக்கலாம்! கொள்கை பற்றாக இருக்கலாம்! பணப்பங்கீடு காரணமாக இருக்கலாம்! இன்னும் வேறு சில காரணங்களும் இருக்கலாம்! இங்கே திமுகவும் காங்கிரஸ் கட்சியும் ஒட்டி உறவாடுவதற்கு பசையாக இருப்பது ஊழல் என்னும் பசையே காரணம்!
2ஜி ஊழல் இரு கட்சிகளுக்கும் பொதுவானது! ராணுவ வாகனம் வாங்கியதில் ஊழல், போர்பஸ் ஆயுதபேர ஊழல், ராணுவ வீரர்களுக்கு குடியிருப்பு கட்டியதில் ஊழல், நிலக்கரி பேர ஊழல் என எண்ணற்ற ஊழல் காங்கிரசின் சொத்து! அன்று கூவத்தை சுத்தம் செய்வதாக சொன்ன ஊழல் முதல், இன்று மணல் கொள்ளை வரை திமுகவின் ஊழல் அனைத்துமே விஞ்ஞான மயமானது! எழிதில் கண்டுபிடிக்க முடியாது! இரண்டு கட்சியினருக்கும் இடையிலான இந்த ஊழல் ஒற்றுமைதான் பசையாக மாறி இரு கட்சிகளையும் இணைத்துள்ளது!
சுதந்திரத்திற்காக போராடிய கட்சியினர் இன்று பிரிவினைவாதிகளோடு நிரந்தர கூட்டணி வைத்துள்ளனர்! இரண்டு கட்சியினருமே “பாரத் மாதாக்கி ஜெ” சொல்ல மாட்டார்கள்!
பாகிஸ்தானால் ஆக்கிரமிக்கப்பட்ட இந்திய பகுதி, சீனாவால் ஆக்கிரமிக்கப்பட்ட இந்திய பகுதியென வடக்கே ஜம்மு காஷ்மீரில் துண்டாடியது காங்கிரஸ்! கட்சத்தீவு இலங்கைக்கு தானம்!, காவிரி ஒப்பந்தம் நீடிக்காமல் காவிரி டெல்டா பகுதி மக்களுக்கு விவசாயிகளுக்கு துரோகம் என தெற்கே துரோகம் செய்தது திமுக! இந்த இரு வகையான தேசத்துரோக செயல்பாடுகளும் இரு கட்சிகளையும் இணைக்கும் பசையாக விளங்குகிறது!
2024 நாடாளுமன்ற தேர்தல்தான் அடுத்துவரும் தேர்தலாகும்! அந்த பொதுத்தேர்தலிலும் இந்த இரு கட்சிகளும் கூட்டணி அமைத்துதான் போட்டியிடுவர்! இவர்களுக்கு வாக்களித்தால், ஊழலை ஆதரித்து வாக்களித்ததாக பொருளாகிவிடும்! ஜம்மு காஷ்மீரையும் கச்சத்தீவையும் தாரைவார்த்த பிரிவினைவாதத்தை ஊக்கப்படுத்தி வாக்களித்ததாக ஆகிவிடும்!
மணல் கொள்ளையர்களிடமும் நிலக்கரி கொள்ளையர்களிடமும் நாட்டை ஒப்படைப்பது, நமது வீட்டை திருடனுக்கு எழுதிக்கொடுத்து, நாம் தெருவில் நிற்பதற்கு சமமாகும்!
திமுகவும் காங்கிரசும் குடும்ப அரசியலை ஆதரிக்கும் கட்சிகள்! குடும்ப அரசியல் என்பது ஒரு கட்சியில் ஆயிரக்கணக்கான தலைவர்கள் இருக்கும் சந்தர்ப்பத்தில் ஓரிருவரின் மகன்களும் அல்லது மகள்களும் அரசியலில் ஈடுபடுவதல்ல!
கட்சியின் தலைமை குடும்பமே கட்சியின் மற்ற தலைவர்களை கொத்தடிமைகளாக வைத்திருப்பதுதான் குடும்ப அரசியல்! மல்லிகார்ஜூன கார்கே என்பவர் காங்கிரசுக்கு தலைவராக இருந்தாலும் அதிகாரம் அவரிடம் இல்லை.
அதிகாரம் நேருவின் குடும்பமான சோனியா, ராகுல், பிரியங்கா, பிரியங்காவின் கணவர் ராபர்ட் வகேரா என்று தலைமை குடும்பத்தின் கையில்தான் இருக்கிறது! திமுகவை பொறுத்தமட்டில் இங்கு ஒரு மல்லிகார்ஜூன கார்கே கூட இல்லை! இவர்களின் கட்சி அதிகாரமும் ஆட்சி அதிகாரமும் கருணாநிதியின் வீட்டு அடுப்படியில்தான் முடங்கிக்கிடக்கிறது!
”நானோ எனது மகனோ இதர குடும்ப உருப்பினர்களில் யாரோ அரசியலுக்கு வரமாட்டார்கள்” – என்று அப்பா பெயரை வைத்து அரசியலுக்கு வந்த ஸ்டாலின் சொன்னார்! ஆனால் இன்று முதலமைச்சர் ஸ்டாலினுக்கு அடுத்த நிலையில் அவரது மகன் உதயநிதிதான் இருக்கிறார்!
அதிகாரவட்டத்தில் மருமகன் இருக்கிறார்! மகள் இருக்கிறார்! மருமகள் இருக்கிறார்! கருணாநிதியின் அக்காள் பேரன்களான தயாநிதி கலாநிதி இருக்கிறார்கள்! இப்படி ஜனநாயகத்தை வைத்து கொள்ளையடிக்கும் கட்சிகளை நாட்டின் பிரதமரை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள் என வாக்களித்தால், இந்தியாவே களவாடப்பட்டு விடுமே!
குடும்பத்தோடு கொள்ளையடிப்பது போதாதென்று விழுப்புறத்தில் பொன்முடி, வேலூரில் துரைமுருகன், சென்னையை சுற்றி டி.ஆர்.பாலு, ஜெகத்ரட்சகன், குமரியில் மனோ தங்கராஜ், நெல்லையில் சாத்தூர் கே.கே.எஸ்.எஸ்.ராமச்சந்திரன், திருவண்ணாமலையில் எ.வ.வேலு, கரூரில் செந்தில்பாலாஜி, தூத்துக்குடியில் கீதாஜீவன் என நாடுமுழுமையும் பினாமிகளை வைத்துக்கொண்டிருக்கிறது இந்த குடும்பம்!
எனவே திமுக காங்கிரஸ் கூட்டணிக்கு வாக்களிப்பது தற்கொலைக்கு சமமானது! ஊழலை தவிற பிரிவினையை தவிர குடும்ப லாபத்தை தவிர இந்த இரண்டு கட்சிகளுக்கும் வேறு எதுவுமே தெரியாதே! வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் தகுதியே இந்த கட்சிகளுக்கு இல்லை! அப்படி இருக்கையில் எப்படி வாக்களிக்க முடியும்?
தேர்தலில் வாக்களிப்பது என்பது சாதாரண விசயமல்ல! உங்களின் ஒவ்வொரு வாக்கும் தேசத்தை பாதிக்கும்! அந்த பாதிப்பு நல்லதாக இருக்க வேண்டும், கெட்டதாக மாறிவிடக்கூடாது! ”மருத்துவம்” என செய்யப்போய் உயிருக்கு ஆபத்தை விளைவித்துவிடக்கூடாது! திமுக காங்கிரஸ் கூட்டணிக்கு தவறிபோய் யாராவது வாக்களித்துவிட்டால், அது பாரத மாதாவுக்கு மரண மாத்திரை ஒன்றினை ஊட்டி விட்டதாகவே பொருளாகிவிடும்! எனவே காங்கிரஸ் திமுக கூட்டணிக்கு வாக்களிக்காமல் இருப்பதே தேசப்பக்தின் செயல்பாடாகும் எனத் தெரிவித்துள்ளார்.