வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இது டிசம்பர் 3-ஆம் தேதி புயலாக உருவாகி டிசம்பர் 4-ஆம் தேதி மாலை சென்னை – மசூலிப்பட்டினம் இடையே கரையைக் கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், “அந்தமான் அருகே உருவாகி, தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலைக்கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, இன்று காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது.
இது சென்னைக்கு தென்கிழக்கு திசையில் 800 கிலோ மீட்டர் தொலைவிலும், புதுச்சேரிக்கு கிழக்கு திசையில் 900 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலைக்கொண்டுள்ளது.
இந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் மேலும் வலுப்பெற்று வடமேற்கு திசை நோக்கி நகரும். டிசம்பர் 3-ஆம் தேதி புயலாக மாறி தெற்கு ஆந்திரா- வட தமிழகத்தில் சென்னைக்கும் மசூலிப்பட்டினத்திற்கும் இடையே 4-ஆம் தேதி மாலை கரையைக் கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்தப் புயல் உருவானால், இதற்கு மிக்ஜம் எனப் பெயரிடப்படும். இந்த பெயர் மியான்மர் நாடு பரிந்துரை செய்தது.