தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மிதமான மழையும், இடையிடையே கனமழையும், பெய்து வருகிறது. இதனால், சென்னை விமான நிலையத்தில் விமானங்கள் புறப்படுவதில் நேற்றும் தாமதம் ஏற்பட்டது.
சென்னையிலிருந்து டெல்லி, மும்பை, அந்தமான், ஹைதராபாத் உள்ளிட்ட, 10-க்கும் மேற்பட்ட இடங்களுக்கு செல்லும் விமானங்கள், தாமதமாகப் புறப்பட்டுச் சென்றன.
சென்னையில் இருந்து காலை 11:20 மணிக்கு சேலம் செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ், மதியம் 2:00 மணிக்கு ஆந்திர மாநிலம், கர்னூல் செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ், காலை 10:15 மணிக்கு அபுதாபி செல்லும் எத்தியாட் ஏர்லைன்ஸ், அதிகாலை 3:00 மணிக்கு செல்லும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் என, நான்கு விமான சேவை ரத்து செய்யப்பட்டது.
அதேபோல், அதிகாலை 2:00 மணிக்கு இலங்கை செல்லும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ், காலை 8:15 மணிக்கு ஷாங்காய் செல்லும் எத்தியாட் ஏர்லைன்ஸ், மதியம் 1:45 மணிக்கு சேலம் செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ், மாலை 4:50 மணிக்கு ஆந்திர மாநிலம், கர்னுால் செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் ஆகிய நான்கு விமான சேவையும், ரத்து செய்யப்பட்டது.
இதுகுறித்து விமான நிலைய அதிகாரிகள் கூறியதாவது: சேலம், கர்னுால் விமானங்கள், சிறிய ஏ.டி.ஆர்., ரகத்தைச் சேர்ந்தவை என்பதால், மோசமான வானிலை காரணமாக ரத்து செய்யப்பட்டது.
இலங்கை மற்றும் அபுதாபி விமான சேவையை, சென்னையில் நிலவும் மோசமான வானிலை காரணமாக, விமான நிறுவனங்களே நேற்று, சேவையை ரத்து செய்து விட்டன என்று கூறினர்.