வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இதனால், இன்று முதல் இராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இது சென்னைக்கு தென்கிழக்கு திசையில் 800 கிலோ மீட்டர் தொலைவிலும், புதுச்சேரிக்கு கிழக்கு திசையில் 900 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலைக்கொண்டுள்ளது.
இந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் மேலும் வலுப்பெற்று வடமேற்கு திசை நோக்கி நகரும். டிசம்பர் 3-ஆம் தேதி புயலாக மாறி, தெற்கு ஆந்திரா- வட தமிழகத்தில் சென்னைக்கும் மசூலிப்பட்டினத்திற்கும் இடையே 4-ஆம் தேதி மாலை கரையைக் கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் கடல் பகுதிகளில் அதிக காற்று வீசும் என்பதால், மீனவர்கள் யாரும் கடலுக்குச் செல்ல வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.
மேலும், கரையோரம் பகுதிகளில் கரை வலை மூலம் மீன்பிடிக்கும் தொழிலிலும் ஈடுபட வேண்டாம். மீனவர் தங்கள் படகைப் பாதுகாப்பாக நங்கூரமிட்டு கடல் பகுதியில் நிறுத்தி வைக்கவும் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதனால், இராமேஸ்வரம் பகுதியில் ஆயிரக்கணக்கான விசைப்படகு மற்றும் நாட்டுப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாமல் படகுகளைப் பாதுகாப்பாக கரையில் நிறுத்தி வைத்துள்ளனர்.
மேலும் கடலில் பின்பிடித்துக் கொண்டிருக்கும் மீனவர்களைக் கடலோரக் கப்பல் படையினர் பைபர் படகுகளில் சென்று கரைக்குச் செல்லுமாறு அறிவுறுத்தினர்.