புனே ஆயுதப்படை மருத்துவக் கல்லூரிக்குக் குடியரசுத் தலைவரின் கொடியைக் குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு வழங்கி கௌரவித்தார்.
புனேயில் உள்ள ஆயுதப்படை மருத்துவக் கல்லூரிக்குக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு குடியரசுத் தலைவரின் கொடியை இன்று வழங்கி கௌரவித்தார். சிறப்புமிக்க செயல்திறனுக்கான இராணுவப்படைப் பிரிவுகள், மாநில – யூனியன் பிரதேச காவல்துறைகள் மற்றும் அவை சார்ந்த அமைப்புகள், நிறுவனங்களுக்கு இந்த உயரிய கௌரவம் வழங்கப்படும்.
புனே, ஆயுதப்படை மருத்துவக் கல்லூரிக்கு இந்த கௌரவத்தை வழங்கி உரையாற்றிய குடியரசுத் தலைவர்,
மருத்துவக் கல்வியில் மிக உயர்ந்த தரத்திலான நிறுவனமாக இந்த நிறுவனம் நற்பெயரைப் பெற்றுள்ளது என்று கூறினார். இந்த நிறுவனத்தில் பயின்றவர்கள் உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் அர்ப்பணிப்புமிக்க சேவையாற்றி நாட்டிற்குப் பெருமை சேர்த்துள்ளனர் என்று தெரிவித்தார்.
இங்கு பட்டம் பெற்ற பல பெண்கள் ஆயுதப்படை மருத்துவத் துறையில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்குவது மகிழ்ச்சியளிப்பதாக தெரிவித்தார். இதன் மூலம் உத்வேகம் பெற்று, மேலும் அதிகமான பெண்கள் ஆயுதப்படைகளில் இணைந்து சேவையாற்றுவார்கள் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
இன்றைய காலத்தில் மருத்துவத் துறையில் செயற்கை நுண்ணறிவு, தொலை மருத்துவம் மற்றும் பிற தொழில்நுட்பங்களின் பயன்பாடு அதிகரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இராணுவ வீரர்களை சிறந்த ஆரோக்கியத்துடன் வைத்திருப்பதிலும், போருக்குத் தயாராக வைத்திருப்பதிலும் ஆயுதப்படை மருத்துவ சேவைகள் பிரிவு முக்கிய பங்களிப்பை வழங்குகிறது.
புனே ஆயுதப்படை மருத்துவக் கல்லூரி குழுவினர் தொடர்ந்து சிறப்பாக சேவையாற்றுவார்கள் என்று நம்பிக்கை தெரிவித்தார்.