இந்திய இராணுவத்தின் பலத்தை மேலும் அதிகரிப்பதற்காக, 97 தேஜஸ் போர் விமானங்கள் மற்றும் 156 பிரசந்த் தாக்குதல் ஹெலிகாப்டர்கள் வாங்குவதற்கு இராணுவ கொள்முதல் கவுன்சில் அனுமதி அளித்துள்ளது.
தலைநகர் டெல்லியில் மத்திய இராணுவ அமைச்சர் இராஜ்நாத் சிங் தலைமையில், இராணுவ கொள்முதல் கவுன்சில் கூட்டம் நேற்று நடந்தது.
அப்போது, இந்திய இராணுவத்தின் போர்த் திறனை மேலும், வலுப்படுத்தும் வகையில், 1 இலட்சத்து 10 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில், 97 தேஜஸ் போர் விமானங்கள் மற்றும் 156 பிரசந்த் தாக்குதல் ஹெலிகாப்டர்கள் வாங்க அனுமதி அளிக்கப்பட்டது. இவை அனைத்தும் உள்நாட்டில் தயாரிக்கப்பட உள்ளன.
தேஜஸ் மார்க் 1ஏ போர் விமானங்கள் விமானப்படைக்காகவும், பிரசந்த் தாக்குதல் ஹெலிகாப்டர்கள் விமானப் படை மற்றும் இராணுவத்திற்காகவும் வாங்கப்பட உள்ளன.
மேலும், தானியங்கி இலக்கு கண்காணிக்கும் ட்ராக்கர் டி-90 டாங்கிகளுக்கான எண்ம கணினி, கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகள் உட்பட பல்வேறு தளவாடங்களை வாங்குவதற்கான ஒப்பந்தங்களுக்கும் இராணுவ கொள்முதல் கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கான மொத்த மதிப்பு 2 இலட்சத்து 23 ஆயிரம் கோடி ரூபாய் ஆகும்.
இந்த கொள்முதலில் 98 சதவீதம் உள்நாட்டு உற்பத்தியாளர்களிடமிருந்தே வாங்கப்படவுள்ளதாகப் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்திய வரலாற்றில் உள்நாட்டு உற்பத்தியாளர்கள் பெற்ற மிகப்பெரிய ஆர்டராக இது இருக்கும்.