சென்னை தீவுத்திடல் பகுதியில், தனியார் நடத்தும் பார்முலா 4 கார் பந்தயத்துக்கு தமிழக அரசு ஏன் இவ்வளவு நிதி ஒதுக்கியிருக்கிறது என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பி உள்ளனர்.
சென்னை தீவுத்திடல் பகுதியில், வருகிற 9 மற்றும் 10-ஆம் தேதிகளில், பார்முலா 4 கார் பந்தயம் நடத்தப்படவுள்ளது. இதற்காக தமிழக அரசு சார்பில் ரூபாய் 40 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த கார் பந்தயத்தினால் பொது போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படும் என்பதால், இதற்கு தடை விதிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் டாக்டர் ஸ்ரீ ஹரிஷ் என்பவர் பொது நல வழக்கு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன் மற்றும் முகமது ஷபீக் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், போட்டியை நடத்தும் தனியார் நிறுவனத்திற்காக தடுப்பு சுவர்கள் அகற்றப்பட்டு, நல்ல சாலைகளை மறு சீரமைப்பதற்கு, பொதுமக்களின் வரிப்பணம் வீணடிக்கப்படுகின்றன. உலகில் பல இடங்களில் நடைபெறும், தெரு கார் பந்தயங்களால், பல அசம்பாவித சம்பவங்கள் நடக்கின்றன.
கார் பந்தயத்தால், அப்பகுதியில் இராணுவம், கடற்படை மற்றும் துறைமுக நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படும் என்றும், இருங்காட்டுக்கோட்டையில் சர்வதேச அளவிலான பந்தயத்தடம் இருக்கும் நிலையில், சென்னை மாநகரின் மத்தியில் பந்தயம் நடத்தப்படுவதாக குற்றம்சாட்டினார்.
மேலும், விளையாட்டுத்துறை அமைச்சரின் ஆசைக்காக, முதலமைச்சர் அனுமதி வழங்கியுள்ளார். இதற்காக தமிழக அரசு கோடிக்கணக்கில் நிதி ஒதுக்கி உள்ளது. ஆனால், பந்தயத்தில் கிடைக்கும் வருமானம் முழுவதுமாக தனியார் நிறுவனத்திற்கே செல்லும்.
இதற்காக தனியார் அமைப்பு குறைந்த அளவே முதலீடு செய்துள்ள நிலையில், பந்தயத்தில் அசம்பாவிதம் நடந்தால் மருத்துவ செலவுகளை யார் ஏற்பது என்று கேட்டார்.
அப்போது நீதிபதிகள், தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் பந்தயத்தை நடத்தாதபோது, தனியார் அமைப்பு நடத்தும் பந்தயத்திற்கு ஏன் இவ்வளவு நிதி ஒதுக்கப்படுகிறது.
பந்தயம் நடத்துவதால், அரசுக்கு கிடைக்கும் வருமானம் குறித்த விவரங்கள் உள்ளனவா?, ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளதா? என நீதிபதிகள் சரமாரி கேள்விகளை எழுப்பினர்.
இதை அடுத்து, தமிழக அரசிற்கும், பந்தய ஏற்பாட்டாளர்களுக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்களைத் தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை வரும் 4-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.