ஆந்திர மாநில முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு, கடந்த 2014 -ம் ஆண்டு முதல் 2019 -ம் ஆண்டு வரை, முதலமைச்சராகப் பதவி வகித்தார்.
அப்போது, திறன் மேம்பாட்டு துறைக்கு ஒதுக்கப்பட்ட நிதியை தவறாகப் பயன்படுத்தினார் என்றும், அதன் மூலம் 300 கோடி ரூபாய் வரை அரசுக்கு இழப்பு ஏற்படுத்தினார் என்றும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
இதனையடுத்து, கடந்த செப்டம்பர் 9-ம் தேதி அம்மாநில குற்றப் புலனாய்வுத் துறையினரால் சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டார். பின்னர், ராஜமுந்திரி சிறையில் அடைக்கப்பட்டார். இதையடுத்து, சந்திரபாபு நாயுடுவின் முன்ஜாமீன் மனுக்களை ஆந்திர உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
மேலும், ஊடகங்கள் மற்றும் அரசியல் நடவடிக்கைகளில் சந்திரபாபு நாயுடு பங்கேற்கக் கூடாது என்றும், மருத்துவமனைக்குச் செல்வதைத் தவிர வேறு எந்த நிகழ்ச்சியிலும் பங்கேற்கக் கூடாது என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
பல்வேறு கட்டங்களை அடுத்து ஆந்திர உயர் நீதிமன்றம் 4 வாரங்களுக்கு நவம்பர் 24 -ம் தேதி வரை நிபந்தனை ஜாமீன் வழங்கியது. 53 நாட்கள் நீதிமன்ற காவலுக்குப் பின்னர் ஜாமீன் வழங்கியது. இதனால், சிறையில் இருந்து வெளியே வந்தார்.
இந்த நிலையில், தனது மனைவி புவனேஸ்வரியுடன் திருப்பதி ஏழுமலையான் திருக்கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய நாயுடு, நாடு நலம் பெற ஏழுமலையானிடம் வேண்டியதாகத் தெரிவித்தார். தனக்கு எப்போது எல்லாம் கஷ்டம் வருகிறோ அப்போது எல்லாம் ஏழுமலையான் காப்பாற்றுவார் என நம்பிக்கை தெரிவித்தார்.